சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே28) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியடைய செயல்படுங்கள் - திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் - நாடாளுமன்ற தேர்தலில் திமுக
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை அடைய கவனத்தோடு தொண்டர்கள் செயல்பட வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை,
• மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை, ஜூன் 3 முதல் தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, கழக ஆட்சியின் சாதனைகளையும், கழகத்தின் வரலாற்றையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
• கழக இளைஞரணி - மாணவரணி – மகளிரணி - தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அமைப்புகளை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.
• கழக ஆட்சி அமைந்த ஓராண்டில், இவையெல்லாம் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தப்பட வேண்டும்.
• தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
• அரசின் நிதிநிலைமை மேம்பட்டுள்ளது.
• பணவீக்கம் குறைந்துள்ளது.
• தேர்தலுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது மக்களிடையே நமக்கு செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது.
• "திராவிட மாடல்" என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும், இந்தியா முழுமைக்கும் பரவிவிட்டது.
தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக:
• தொண்டர்களின் உழைப்பின் காரணமாகவே முதலமைச்சராக நான் இருக்கிறேன். பலரும் அமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ளீர்கள். சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகியிருக்கிறீர்கள். மாவட்டக் கழக செயலாளர்களாக ஆகி இருக்கிறீர்கள். உள்ளாட்சித் தேர்தலின் மூலமாக பலரும் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள்.
• நீங்கள் அனைவரும்தானே கழகத் தொண்டர்களைக் கவனிக்க வேண்டும்? நீங்கள் தானே தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தாக வேண்டும்?
• கடைக்கோடித் தொண்டனின் தேவையை அந்தப் பகுதியின் அமைச்சரோ அல்லது சட்டமன்ற உறுப்பினரோ தீர்க்க வேண்டுமா? அல்லது முதலமைச்சராக இருக்கிற நான் தீர்க்க வேண்டுமா?
• தொண்டன் உழைக்காமல் நிர்வாகி வேலை பார்க்காமல், யாரும் வெற்றி பெற்று வந்துவிடவில்லை; நாளைக்கே தேர்தல் வந்தால் அதே தொண்டன் வீட்டுக்குத்தான் நீங்கள் போயாகவேண்டும்.
• தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு, நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
• கழகத்தினரின் கோரிக்கைகளுக்கு உரிய முன்னுரிமை அளித்து அவற்றை நிறைவேற்றி, தேவையான உதவிகளை செய்து தந்திடவேண்டும் என்று கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்ற செய்திதான் வரவேண்டும்.
• அமைச்சர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் பொறுப்பாளர்களும் முழுமையாக கவனம் செலுத்தி தொண்டர்களும், அவர்தம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிசெய்திட வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தல்:
• இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. அதில் முழுமையான வெற்றியை அடைய கவனத்தோடு செயல்பட வேண்டும்.
உட்கட்சித் தேர்தல்:
• கட்சித் தேர்தலில் தகுதி வாய்ந்தவர்களை - தகுதி வாய்ந்த பொறுப்புகளுக்குக் கொண்டு வாருங்கள்.
• உட்கட்சி தேர்தலில் சில இடங்களில் தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் செய்த தவறுகள், மாவட்டக் கழகச் செயலாளர்களின் தவறுகள் குறித்து முழுமையான அறிக்கை என்னுடைய கவனத்திற்கு வந்திருக்கிறது.
• தவறுகளைச் செய்தவர்கள் யார் யார் என்று எனக்குத் தெரியும். தவறு செய்தவர்களின் மனச்சாட்சிக்கும் தெரியும்.
• தலைமைக் கழகத்தில் நிர்வாகிகளின் விசாரணைக்கு பிறகு நடவடிக்கைகள் நிச்சயமாக மேற்கொள்ளப்படும்.
• இனி நடைபெறவிருக்கும் கழகத் தேர்தலை மிகக் கவனமாகவும், நேர்மையாகவும் நடத்திட வேண்டும் என்பதில் தலைமைக் கழக நிர்வாகிகளும் மாவட்டக் கழகச் செயலாளர்களும் உறுதியாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "திராவிட மாடல்" என்பதும் "மோடியின் மாடல்" என்பதும் வேறு வேறல்ல - பெ.மணியரசன் சிறப்பு நேர்காணல்