சென்னை: இது குறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வு குறித்து அதிமுகவின் மீதும், என் மீதும் குற்றஞ்சாட்டி நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்தால் 'எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத் தொடங்கிவிடுவார்கள்' என்ற கோயபெல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் பேசுகிறாரோ என்ற எண்ணம்தான் மக்கள் மத்தியில் தோன்றுகிறது. திமுகவின் இந்தப் பொய்ப் பரப்புரையை முறியடிக்க வேண்டிய கடமை அதிமுகவிற்கு உண்டு.
நீட்டும் திமுகவின் காந்திச்செல்வனும்
இந்திய மருத்துவக் குழுவால் வெளியிடப்பட்ட அறிவிப்பு 2010 டிசம்பர் 27 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் முதல் பத்தியிலேயே இளநிலை மருத்துவப் படிப்பிற்கான ஒழுங்கு நெறிமுறைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு இந்திய மருத்துவக் கழகம் வகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முதல் பத்தியிலேயே முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான ஒழுங்கு நெறிமுறைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு இந்திய மருத்துவக் கழகம் வகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 2010ஆம் ஆண்டு திமுக அங்கம்வகித்த மத்திய காங்கிரஸ் அரசின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட அறிக்கைகளில்தான் இளநிலை - முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த எஸ். காந்திசெல்வன்.
தோற்றுவிடுவோம் எனக் கையெழுத்து போட்டதா திமுக?
திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். '2010ஆம் ஆண்டு டிசம்பரில் நீட்டுக்கு கையெழுத்துப் போட்ட திமுக, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில், ஐந்தே மாதத்தில் ஆட்சியையே இழந்துவிட்டது.
பிறகு எப்படி திமுகவின் ஆட்சிக் காலத்தில் நீட் வரும். எனவே, மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது நீட் தடுத்து நிறுத்தப்பட்டது' என்ற துரைமுருகனின் வாதமே வடிகட்டின பொய்.
ஒருவேளை, 2011 தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்துகொண்டுதான் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இதுபோன்ற ஏழை, எளிய மக்கள் விரோத நுழைவுத் தேர்வுக்கு திமுக ஆதரவு அளித்ததோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.
திமுகவின் காந்திசெல்வனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நீட்
இதனைத் தொடர்ந்து, இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வின் மூலம்தான் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் தனது 2012 ஏப்ரல் 26 அன்றைய கடிதம் மூலம் அனைத்து மாநில சுகாதாரச் செயலர்களுக்கும் தெரிவித்தது. இந்தச் சமயத்தில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இல்லை.
அதே சமயத்தில் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்துக்கொண்டிருந்தது. மத்திய அரசின் இந்தச் செயலை எதிர்த்து அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா குரல்கொடுத்தார். வேறு சில மாநிலங்களும் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதனையடுத்து, மத்திய அரசு நீட் தேர்வைத் தள்ளிவைத்தது.
ஆனால், அடுத்த ஆண்டிற்கான தேர்வினை 2013 மே 5 அன்று அப்போதைய மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட 115 மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் திமுக அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசால் பிறப்பிக்கப்பட்ட, திமுகவைச் சார்ந்த அப்போதைய மத்திய இணை அமைச்சர் எஸ். காந்திசெல்வனால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நீட் தேர்விற்கு வழிவகுக்கும் இரண்டு அறிவிக்கைகளை ரத்துசெய்து 2013 ஜூலை 18 அன்று தீர்ப்பளித்தது.
115 தனியார் கல்லூரிகளால் தாக்கல் வழக்கில் தீர்ப்பு
நீட் தேர்வு குறித்த 2010ஆம் ஆண்டு அறிக்கைகளில்தான் திமுகவிற்குப் பங்கு இருக்கிறதே தவிர, அதனை ரத்துசெய்து 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திமுகவின் பங்கு இல்லை என்பதுதான் யதார்த்தம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு திமுக ஆதரவளித்த காலகட்டத்தில்தான் திமுக ஆட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்குத் தடை வாங்கியது என்றும், அந்த வழக்குதான் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றதாகவும் துரைமுருகன் கூறுகிறார். இதில் கற்பனை வளம் இருக்கிறதே தவிர உண்மை இருப்பதாகத் தெரியவில்லை.