சென்னைகொசப்பேட்டையிலுள்ள கந்தசாமி கோயில், ஆதிமொட்டையம்மன் கோயில், குளம் ஆகிய இடங்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். தொடர்ந்து, கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் பராமரிப்பு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “400 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோயில்களிலும் சுத்தமான தண்ணீர், கழிப்பிட வசதி உள்ளிட்டவை மக்களுக்குக் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்துக்களுக்கு எதிரான இயக்கம் கிடையாது
இந்து சமய அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட ஊழியர்களை எந்த துறை ஊழியர்களும் கட்டுப்படுத்த அனுமதி இல்லை. தற்போது கோயிலுக்கு உள்ளே மட்டும் திருத்தேர் உலா வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 80 விழுக்காடு அளவிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லேண்ட் விவகாரத்தில் இடத்தின் உரிமையாளரிடம் சமரசம் செய்ய இது பஞ்சாயத்து அரசு இல்லை. குயின்சுலாந்து வழக்கு நீதிமன்றம் வரும்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வழக்கறிஞர் ஆஜர் ஆனார்கள். எனவே அந்த இடம் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமானது.
திருக்கோயில்கள் வைத்து திமுக இந்துக்களுக்கு, ஆன்மிகத்திற்கும் எதிரான இயக்கம் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால் ஸ்டாலின் முதலமைச்சரான பின்பு அதனை தகர்த்துள்ளார். திமுக இந்துக்களுக்கு எதிரானது இல்லை என்பதை மக்கள் உணர்ந்ததால்தான் நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் அமோக வெற்றியை தந்துள்ளனர். இனிவரும் தேர்தல்களிலும் இந்த வெற்றி தொடரும்” என தெரிவித்தார்.
வேட்டை தொடரும்
தொடர்ந்து பேசிய அவர், “சிலை கடத்தலை தடுக்கும் அரசாக திமுக செயல்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த கடத்தல் சிலைகளையும் மீட்போம், விரைவில் எத்தனை சிலைகள் மீட்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிவிக்கப்படும்.
இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 342.38 ஏக்கர் நிலங்களும், 1789.2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தையும் மீட்கும் வரை இந்து சமய அறநிலையத்துறை வேட்டை தொடரும்.
அதேபோல் நகைகளை உருக்கி வருவாயை பெருக்குவதை தேவையில்லாமல் பூதாகரம் ஆக்க நினைப்பவர்கள் நிச்சயம் தோல்வி அடைவார்கள். பூதக்கண்ணாடி வைத்து எந்த தவறும் நடைபெறாத வகையில் பணிகள் செய்து வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க:சமூக நீதிக் கண்காணிப்புக் குழு தலைவராக சுப. வீரபாண்டியன் நியமனம்!