உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட அனுமதி கோரும் விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. வடசென்னை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திமுகவைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய பணக்கார கட்சி ஆகிவிட்டது. ஒரு மேயர் வேட்பாளருக்கு ரூ.50 ஆயிரம். அது கோடீஸ்வரர்களின் கட்சி. ஏழைகளின் கட்சி அல்ல. ஏழைகளுக்கான கட்சி என்றால் அது அதிமுக இயக்கம்தான்.
'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!' என்பதுபோல திமுக ஒரு மிரட்சியோடு இன்றைக்கு இருக்கிறது. அதனை நீங்கள் அவரின் ட்விட்டரில் கூட பார்க்கலாம். நிர்வாக ரீதியாக மாறுதல் என்பது சகஜம். பலம் இருந்தால் பயப்பட தேவையில்லை. நீச்சல் தெரிந்தவனுக்கு ஆழத்தை பற்றி கவலை இல்லை. அவன் தைரியமாக தண்ணீரில் குதிப்பான். நீந்துவான், கரைசேர்வான். அதுபோல்தான் அதிமுக. எவ்வளவு பெரிய சமுத்திரம் என்றாலும் நீந்தி கரையைக் கடந்துவிடும்.
ஆனால் நீந்த தெரியாமல், தத்தளித்து மூழ்கிப்போவதுதான் திமுக. அந்த மாதிரி மு.க. ஸ்டாலின் உள்ளார். ஒரு ஆணையரை மாற்றிவிட்டார்கள் என்று ட்வீட் செய்கிறார். அப்புறம் மாற்றுகிறார், ஆணையர் அல்ல செயலர் என்று. இதையெல்லாம் பார்க்கும்போது அவர் தனது மூளையை பயன்படுத்துவது இல்லை என்பது தெரிகிறது. யாரோ எழுதிக் கொடுக்கிறார்கள், இவர் ட்வீட் செய்கிறார். மற்றபடி தனது மூளையைக் கொண்டு ஆராய்வதெல்லாம் கிடையாது.