11 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட சேலத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், ஒரு தொகுதி தவிர்த்து மற்ற அனைத்தையும் அதிமுக கைப்பற்றியது. அடுத்து வந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. இருப்பினும், அதன் பிறகு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், சொல்லும்படியான இடங்களை அதிமுகவே பெற்றது. அதாவது, அங்குள்ள 20 பஞ்சாயத்து யூனியனில் 37 வார்டு உறுப்பினர் பதவிகளை அதிமுகவும், 18 திமுகவும், 13 பாமகவும் கைப்பற்றின. இப்படி, சேலம் மட்டுமல்லாமல் 10 மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலம், திமுகவிற்கு எப்போதுமே நம்பிக்கையற்ற மண்டலமாகவே பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் இருந்தவரை சேலத்தை நம்பிய திமுக, அதன் பிறகு உறுதிமிக்க மாவட்டத் தலைமை இல்லாமல் திணறி வந்தது. மேலும், உட்கட்சி முரணும் அக்கட்சி அங்கு மேலும் வளர தடையாகவே பார்க்கப்பட்டது. ஆக, அதிமுக திமுக இரண்டையும் ஒப்பிடுகையில் அதிமுகவிற்கே கொங்கு இதுநாள் வரை பெரும் சாதகமாக இருந்திருப்பதாக, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் மிக அருகே வந்துவிட்டது. பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில், களம் திமுகவிற்கு சாதகமாக இருப்பதாகவே தெரிவித்துள்ளன. தெற்கு, மத்தி, வடக்கு, டெல்டா மண்டலங்களில் திமுக அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டிருந்தும், மேற்கில் அதாவது கொங்கு மண்டலத்தில் அத்தகைய நிலை இல்லை என்பதையும் கருத்துக்கணிப்புகள் குறிப்பிட்டுள்ளன. அங்கு அதிமுகவே அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திமுக தலைமையை சற்று அதிகமாகவே யோசிக்க வைத்துள்ளது. இந்த யோசனை முன்பே திமுகவிற்கு இருந்ததால்தான், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தொடங்கி மகளிரணிச் செயலாளர் கனிமொழி என, கட்சியின் முன்னணியினர் பலரையும், சேலம் உட்பட கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் செய்ய அனுப்பி வைத்தது. திமுக தலைவர் ஸ்டாலினும் மக்கள் கிராம சபை தொடங்கி, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் போன்ற பல்வேறு கட்ட பிரச்சாரத்தையும் சேலம் உள்ளிட்ட தொகுதிகளில் வீரியத்துடன் நடத்தினார்.