சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “1957ஆம் ஆண்டு முதன்முறையாகக் திமுக தேர்தல் களத்தைச் சந்தித்தபோது வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே, தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமித்திட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த இயக்கம் இது.
உடல் உழைப்புத் தொழிலாளர்களாக மட்டுமே தமிழர்கள் பெருமளவில் வெளிநாடுகளைத் தேடிச் சென்ற நிலை மெல்ல மெல்ல மாறி, தி.மு.க.வின் சமூகநீதிக் கொள்கைகளாலும் - பொது நுழைவுத் தேர்வு ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளாலும் தமிழகத்தில் பலரும் பொறியியல் - மருத்துவம் பட்டம் பெற்று, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகள் உள்பட உலகின் பல பகுதிகளிலும் பணியாற்றி வருகிறார்கள்.
திராவிட இயக்க உணர்வும் - தமிழர்கள் என்ற பீடும் பெருமையும் கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்களாக, தங்கள் தாய்த் தமிழகத்தின் நலனை என்றும் மறக்காதவர்கள். அத்தகைய வெளிநாடு வாழ் இந்தியர்களான தமிழர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியம் காக்கும் உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து, இந்திய வெளியுறவுத்துறை - தூதரகங்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும், சமூக வலைதளங்கள் வாயிலாக அவர்கள் ஆற்றி வரும் இயக்கப் பணிகளை மேம்படுத்தி - கழகத்திற்கு மேலும் வலுசேர்த்திடவும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிய அணியாக வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி உருவாக்கப்பட்டுள்ளது.