உள்ளூர் செயல் வீரர்கள்
திராவிட கட்சியான திமுகவுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் செல்வாக்குமிக்கத் தலைவர்கள் இருப்பது என்பது மிகப்பெரிய பலம். கட்சிக்கு அவர்கள் பெரிய அடையாளமாக மட்டுமில்லாமல் தூண்களாகவும் இருந்தனர்.
தலைமையைத் தவிர்த்து, இவர்களே கட்சிக்கான பிரபலமான முகமாகவும் திகழ்ந்துவருகின்றனர். இவர்களால் அடையாளப்படுத்தப்படும் உள்ளூர் செயல் வீரர்களே நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்களாகவும் களம்கண்டனர்.
பிற திராவிட கட்சிகளைவிட, இந்த நடைமுறை திமுகவில் அழுத்தமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்போது, இந்த மாவட்டத் தலைவர்களின் முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருவது கண்கூடாகத் தெரிகிறது.
கட்சியின் தேர்தல் வியூகம், பரப்புரை ஆகியவற்றிலும் இவர்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்காமல் குறைந்துவருவதாகப் பேசப்படுகிறது.
ஸ்டாலினுக்கே முன்னிலை
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர்கள் எனச் சூடு பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான திமுகவின் தேர்தல் பரப்புரை திமுக தலைவர் ஸ்டாலினை மட்டுமே முன்னிலைப்படுத்தி நடந்துவருகிறது. மற்ற திமுக தலைவர்களுக்கான வாய்ப்பு கடந்த காலத்தைவிட தற்போது குறைந்துள்ளது.
ஐபேக் வருகைக்குப்பிறகு, இது மிக தெளிவாகத் தெரிகிறது. இந்த நிலைமை, கட்சி அமைப்பில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
நட்சத்திரப் பேச்சாளர்கள்
தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சிகளின் வளர்ச்சியில் உள்ளூர் தலைவர்கள், பேச்சாளர்கள் பங்கு அளப்பரியது. தங்களது கட்சியின் கொள்கைகளையும் பாமர மக்களிடம் பரப்பவதற்கும், அவர்களைக் கவருவதற்கும் பேச்சாளர்களையே பெரும்படையாகக் கொண்டிருந்த திராவிட கட்சிகள்.
அண்ணா ஆட்சி காலம் தொட்டே எம்ஜிஆரை திமுக தனது தேர்தல் பரப்புரைக்கு உபயோகப்படுத்தியது. மக்களுக்கு மிக அறிமுகமான முகமாக இருப்பதோடு, நட்சத்திர கவர்ச்சியின் மூலம் மக்களின் வாக்குகளைக் கவர முடியும் எனப் பலமாக நம்பினர். அது அக்கட்சிக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தது.
திமுகவிலிருந்து பிரிந்து அண்ணா திமுக பிரபலமாக, எம்ஜிஆர் என்ற பிரபல முகம் மூலவராகத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்பட்டது.
அதேபோல் கருணாநிதி, திண்டுக்கல் லியோனி, புதுக்கோட்டை விஜயா, திருச்சி சிவா, வெற்றி கொண்டான் எனப் பெரும் பரப்புரை பீரங்கிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் கடந்த காலங்களைவிட சிறந்த பேச்சாளர்களைப் பரப்புரைக்கு உபயோகிக்கப்பது அரிதாகிவிட்டதாகப் பார்க்கப்படுகிறது.