சென்னை: துக்ளக் இதழின் 51ஆவது ஆண்டு விழாவில், நீதிபதிகள் நியமனம் குறித்த ஆடிட்டர் குருமூர்த்தியின் பேச்சு, இந்திய நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் கண்டனத்திற்குரிய பேச்சு என்றும், குருமூர்த்தியின் அநாகரிகமான அவதூறுப் பேச்சுகளை அ.தி.மு.க. கண்டிக்காதிருப்பது, அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரைப் பற்றியும் கூட்டுக் கொள்ளை பற்றியும் குருமூர்த்தி பேசுவதை ஏற்றுக்கொள்வதாகத்தான் பொருள் என்றும் திமுக சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னையில் நேற்று முன்தினம், (ஜன.14) நடத்தப்பட்ட துக்ளக் இதழின் 51ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில், தற்போது அந்த இதழை நடத்தும் பொறுப்பில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி, வசைமாரிப் பேச்சை வாரி வழங்கியிருக்கிறார்.
பட்டயக்கணக்காளரான குருமூர்த்தி, பொருளாதார அறிஞராக முன்னிறுத்தப்படுவதும், அதன் அடிப்படையில் அவர், ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவில் இயக்குநராக்கப்பட்டதும் அத்துறை சார்ந்த அறிஞர்களால் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அவர் இப்போது நீதித்துறை குறித்தும் கருத்துச் சொல்லியிருக்கிறார். சட்டத் துறையோடு எந்தத் தொடர்பும் இல்லாத அவர், சாஸ்த்ரா சட்டப் பள்ளியின் ஆய்விருக்கைப் பேராசிரியராக நியமனம் பெற்றிருக்கிறார். கடந்த 2017-ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் புதிய வழக்குரைஞர்கள் உறுதியேற்பு விழாவிலும் கூட அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தனியார் பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் கௌரவ வாய்ப்புகளாலும், பார் கவுன்சில் தன்னை அங்கீகரித்ததாலும், அவர் தன்னை தற்போது சட்ட அறிஞராகவும் வெளிக்காட்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்.
இப்போது, நீதிபதிகள் நியமனத்தையே அவர் கேலிக்குரிய ஒன்றாகச் சித்தரித்திருக்கிறார். தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருப்பவர்கள், ஆட்சியிலிருக்கும் கட்சிகளின் கால்களைப் பிடித்து அந்த வாய்ப்பைப் பெற்றவர்கள் என்று குருமூர்த்தி பேசியிருப்பது, இந்திய நீதித்துறைக்கே களங்கம் விளைவிக்கும் கண்டனத்திற்குரிய பேச்சு.