தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதியில்லை, டெண்டர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்குவதா?' - ஸ்டாலின் கேள்வி - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், நிவர் புயல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதி இல்லாதபோது, டெண்டர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்குவதா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

mk-stalin-statement
mk-stalin-statement

By

Published : Jan 21, 2021, 12:08 PM IST

இது தொடர்பாக அவர் இன்று (ஜனவரி 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னர், வசூல் வேட்டையை நடத்த வேண்டும் என்பதற்காக, முதலமைச்சர் பழனிசாமி பொறுப்பில் உள்ள பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறையில் கடந்த மூன்றே மாதங்களில் ரூ. 2855 கோடிக்கும் மேல் டெண்டர் விடப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் நடந்து வரும் டெண்டர் கொள்ளைகளின் தொடர்ச்சியாக, தேர்தல் வரவுள்ள இந்த நேரத்திலும் முதலமைச்சர் பழனிசாமி இதுபோன்று, “கடைசி நிமிட" (லாஸ்ட் மினிட்) கையெழுத்திட்டு டெண்டர் விடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்த போது திட்டங்களை அறிவிக்க தயங்கிய முதலமைச்சர், தற்போது கமிஷனுக்காகவே புதிய திட்டங்களை அறிவிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

தமிழ்நாட்டை மீளா கடனில் மூழ்க வைத்துள்ள பழனிசாமி, புதிய திட்டங்களுக்கு கையெழுத்திடும் அதிகாரத்தை இன்னும் ஒரு மாதத்தில் இழக்கப் போகிறார் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மீதமுள்ள ஒரு மாதத்துக்குள் எப்படியாவது கஜானாவை சுரண்டி விட வேண்டும் என திட்டமிட்டு வருவதாக விமர்சித்தார்.

100 நாள் ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், நிவர் புயல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதி இல்லாதபோது, டெண்டர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்குவதா என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், அரசு நிதியை, தங்களின் சுயலாபத்துக்கு பயன்படுத்துவதுதான் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் ஒரே நோக்கம் என்று குற்றஞ்சாட்டினார்.

எனவே, மக்களின் ஆதரவுடன் இன்னும் நான்கு மாதங்களில் திமுக ஆட்சி அமைந்தவுடன், ஒவ்வொரு துறையிலும் கடைசி நேரத்தில் விடப்பட்ட அனைத்து டெண்டர்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவை ரத்து செய்யப்படும் என்றும் அவற்றில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து வெளிப்படையாக விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தனது அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details