தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள்கள் தாராளமாக கிடைப்பதாக கூறி, சட்டபேரவைக்குள் அவற்றை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டுச் சென்றனர்.
இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டபேரவை உரிமைக்குழுவுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி, சட்டபேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில், மு.க.ஸ்.டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உரிமைக்குழு நோட்டீஸூக்கு தடை விதித்தது.
இந்த வழக்கில் சட்டபேரவை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், உரிமைக்குழு நடவடிக்கையில் பாரப்பட்சம் இல்லை. சபாநாயகரிடம் அனுமதி பெறாமல் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சபைக்குள் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கொண்டு வந்துள்ளனர். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 2017ம் ஆண்டு முதல் கடந்த 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வழக்குரைஞர் ஜெயபிரகாஷ் நாராயணன், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட முதல் அமர்வில், ஒரு கடிதம் கொடுத்தார்.
அதில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏ.க்கள் பதவி காலம் 2021ல் முடிவடைய உள்ளதால், குட்கா விவகாரத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தடை விதித்த வழக்கை விரைவாக விசாரணை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்படி, இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு எடுத்தனர். அப்போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி, இந்த வழக்கின் இறுதி விசாரணை தேதியை முடிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். திமுக எம்.எல்.ஏ சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் தனது தரப்பு கருத்தை தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெறும் என்றும் அனைத்து தரப்பினரும் வாய்தா வாங்காமல் அன்று ஆஜராகி வாதிட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முக்கியப் பாடங்களை நீக்கும் முடிவு அபாயமானது - மத்திய கல்வி அமைச்சகத்தை கண்டிக்கும் ஸ்டாலின்