சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதிப்பது, தேர்தலில் ரகசியத்தை பாதிக்கும்" என வாதிட்டார்.
தொடர்ந்து அரசியல் சாசனத்தின்படி, தேர்தல் வாக்களிப்பில் அனைவரையும் சமமாக கருத வேண்டும். எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது எனத் தெரிவித்த அவர், மாற்றுத் திறனாளிகள் குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை எனவும், வாக்காளர் யார் என்பதை வாக்குச்சாவடிக்கு செல்லும் போதுதான் அடையாளம் காண முடியும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக எந்த ஆலோசனையையும் தேர்தல் ஆணையம் நடத்தவில்லை எனவும் அவர் வாதிட்டார். தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், தவறான யூகத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், தற்போது வழங்க உள்ள தபால் வாக்கு என்பது வாக்காளரின் விருப்பத் தேர்வுதான் என்றும் கூறினார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா பாதித்தவர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்ய அனுமதி வழங்குவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், இதுசம்பந்தமாக மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்தாலே போதுமானது எனவும், மாநில அரசுகளுடன் ஆலோசிக்க அவசியமில்லை என்றும் வாதிட்டார்.
தபால் வாக்குக்கு எதிரான வழக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு - மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு
சென்னை: மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.