245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். 17 மாநிலங்களைச் சேர்ந்த 55 உறுப்பினர்களின் பதவிகாலம் வரும் ஏப்ரலுடன் நிறைவடையவுள்ளது.
தமிழ்நாட்டில் திருச்சி சிவா (திமுக), டி.கே. ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), விஜிலா சத்யானந்த் (அதிமுக), செல்வராஜ் (அதிமுக), முத்துக்கருப்பன் (அதிமுக), சசிகலா புஷ்பா (அதிமுகவிலிருந்து விலகி தற்போது பாஜகவில் உள்ளார்) ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல மாதத்தில் நிறைவடைகிறது.
மாநிலங்களைவக்கு வரும் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மார்ச் 6ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் ஐந்து நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்னும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.