சென்னை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 90 விழுக்காடு இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்றனர்.
குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. அதேபோன்று 138 நகராட்சியில் 137 நகராட்சியை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றியுள்ளன.
திமுகவின் மாபெரும் வெற்றி
பேரூராட்சிகளிலும் திமுக கூட்டணிக் கட்சியினர் 90 விழுக்காடு இடங்களைப்பெற்று வரலாற்று சாதனை படைத்தனர். தமிழ்நாட்டில், மொத்தமுள்ள 21 மாநகராட்சியில் 1,373 வார்டு கவுன்சிலர் பதவிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் 1,103 இடங்களைப் பிடித்துள்ளனர். இதில் திமுக மட்டும் தனியாக 952 இடங்களைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோன்று, மொத்தமுள்ள 138 நகராட்சியில் 3,842 வார்டு கவுன்சிலர் இடங்களில் திமுக கூட்டணி 2,659 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக மட்டும் 2,360 இடங்களிலும், காங்கிரஸ் 151 இடங்களையும் பிடித்துள்ளது.
மொத்தமுள்ள 4,389 பேரூராட்சிகளில் 7,604 வார்டு கவுன்சிலர் பதவிகளில் திமுக கூட்டணி 4,995 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக மட்டும் 4,389 இடங்களிலும், அதிமுக 1,206 இடங்களிலும், காங்கிரஸ் 368 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
தர்மத்தை மீறிய உடன் பிறப்புகள்
கூட்டணி தர்மத்தை மீறி, மேற்கண்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெரும்பாலான இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்றனர்.
குறிப்பாக, கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அக்கட்சியின் வேட்பாளரை ரூமில் போட்டு பூட்டி வைத்துவிட்டு, பெரியநாயக்கன்பாளையம் திமுக பொறுப்பாளர் விஷ்வ பிரகாஷ் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதேபோன்று, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இதுபோன்று திமுக பொறுப்பாளர்கள் பதவிக்காக கூட்டணிக் கட்சியினரை விரட்டி அடித்தும், உதைத்தும் பதவி ஏற்ற சம்பவம் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆகியோர் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினிடம் புகாரும் தெரிவிக்கப்பட்டது.
ஸ்டாலின் இட்ட கட்டளை
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட இரண்டு பக்க கடிதத்தில், திமுக தலைமை அறிவித்த கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்துப்போட்டியிட்டு வெற்றி பெற்ற நகர் மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மேற்கண்ட கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கூட்டணிக்கட்சிகளுக்கு வழங்கிய இடங்களில் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
பின்னர், தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றும்; இல்லையென்றால் அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் இந்தச் சம்பவம் தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், பல இடங்களில் கூட்டணி கட்சி மற்றும் அதற்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், பல இடங்களில் இன்னும் ராஜினாமா செய்யாமல் உள்ளனர்.
கடும் கோபத்தில் ஸ்டாலின்
ஸ்டாலின் தனது பேச்சைக் கேட்காத, கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்படாத நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்கள், அண்ணா அறிவாலயத்திற்கு வரக்கூடாது என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சொந்தக் கட்சியினரும் பாதிப்பு
சேலம் மாவட்டம், செந்தாரப்பட்டி பேரூராட்சித்தலைவர் பதவிக்கு இரண்டாவது வார்டில் வெற்றி பெற்ற பவுனம்மாள் என்பவரை திமுக தலைமை அறிவித்தது. ஆனால், மார்ச் 4ஆம் தேதி மறைமுகத் தேர்தலன்று பவுனம்மாள் வேட்புமனு தாக்கல் செய்ய தயாரான நிலையில், ஐந்தாவது வார்டு திமுக சார்பில் வெற்றி பெற்ற லீலா ராணி என்பவர் மனு தாக்கல் செய்தார். இதனால், பவுனம்மாள் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவில்லை.
இதன்காரணமாக லீலா ராணி போட்டியின்றித் தலைவராக தேர்வானார். இந்தச் சம்பவம் செந்தாரப்பட்டி திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கடந்த வாரம் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் புகார் கொடுக்க வந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்திக்க முடியாத சூழ்நிலை காரணமாக மீண்டும் ஊர் சென்றனர்.
பேரூராட்சி, நகராட்சி, தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை சொந்தக்கட்சிக்காரர்களே பறித்த சம்பவமும் அரங்கேறியுள்ளது.
'தலைவரை நம்புகிறோம்'
இதுகுறித்து நம்மிடம் பேசிய, சேலம் செந்தாரப்பட்டி பேரூராட்சி ரமேஷ் பெரிய அண்ணா (பவுனம்மாள் கணவர்), "இந்த பேரூராட்சியில் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளாக திமுகவில் இருந்து வருகிறேன். திமுக சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளேன்.
பதவி பறிபோன பவுனம்மாள் கணவர் பேட்டி 2001 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் தலைவர் போட்டிக்கு நான் போட்டியிட்டேன். மேலும், வார்டு கவுன்சிலராக இருக்கும்போது துணைத் தலைவருக்கு போட்டியிட்டேன். 2006- 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில் மறுக்கப்பட்டது.
தற்போது, நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் என்னுடைய மனைவி இரண்டாவது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதன்காரணமாக, நகர கழகம் ஆதரவோடு பேரூராட்சித் தலைவருக்கு போட்டியிட திமுக தலைமைக்கு மனு கோரப்பட்டிருந்தது. திமுக தலைமையும் என் மனைவியின் பெயரை அறிவித்தது.
ஆனால், இங்குள்ள மாவட்ட கழகமும், ஒன்றியக் கழகமும் அதனை மறுத்து, வேறொரு திமுக வேட்பாளருக்கு பதவியை வழங்கியுள்ளனர். இது குறித்து திமுக தலைமைக் கழகத்திற்கு மனு செய்திருந்த நிலையில், இதுகுறித்து விசாரித்து நல்ல முடிவு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா பாணியை கையில் எடுப்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்
அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது இதுபோன்று கூட்டணிக் கட்சிகளுக்கு, கட்சித் தலைமை அறிவித்த பதவிகளை வேறு ஒருவர் தட்டி பறிக்க வாய்ப்பு இருந்திருக்காது. மேலும் தட்டிப்பறிக்கும் என்ற நினைப்பு கூட அவர்களுக்கு வந்திருக்காது என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
மேலும், அதிமுகவில் அப்படி நினைத்தால் கூட, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவரை அடுத்த கணமே கட்சியிலிருந்து நீக்கிய சம்பவங்களும் தமிழ்நாட்டில் அரங்கேறி உள்ளன. மேலும், ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அமைச்சர்களும், தனது கட்சிக்காரர்களும் தன் சொல் கேட்கும் அளவிற்கு வைத்திருந்தார்.
இதில், ஏதாவது சற்று சுணக்கம் ஏற்பட்டால்கூட அடுத்த கணமே அமைச்சர்களையோ அல்லது கட்சிக்காரர்களையோ அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி எறிந்தவர் ஜெயலலிதா. எனவே, இந்தச் சூழலை எந்த பாணியில் ஸ்டாலின் கையாளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது குறிப்படத்தக்கது.
இதையும் படிங்க: விட்டுக்கொடுத்த விசிக - நன்றி தெரிவித்த திமுக எம்.பி.,