கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்.எல்.ஏ-க்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி அதனை ரத்து செய்தது.
இதையடுத்து உரிமைக்குழு இரண்டாவது முறையாக மீண்டும் கூடி அனுப்பிய நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து தனி நீதிபதி விதித்த தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர் இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி ஆகியோர், ” குட்கா பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ தான் தடை செய்யப்பட்டுள்ளது.
பேச்சுரிமை அடிப்படையில், குட்கா பொருட்கள் விற்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்ட தான் பேரவைக்கு உறுப்பினர்கள் குட்காவை கொண்டு சென்றனர். நாடாளுமன்றம் எது உரிமை, உரிமை மீறல் என்பதை வரையறை செய்யவில்லை. முதல்வரை மாற்றக்கோரி 18 எம்.எல்.ஏ க்கள் ஆளுநரிடம் மனு அளித்தனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஒ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இப்படி தொடர்ச்சியாக அரசின் பெரும்பான்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்ததால் தான், ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ-களுக்கு எதிராக உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது ” என வாதிட்டனர்.