குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகைப் பதிவேடு ஆகிய மூன்று விவகாரங்கள் குறித்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஐஜேகே, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ' இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில், அனைத்து மக்களையும் பாதிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு தயாரிக்க தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்றும் அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன' என்று தெரிவித்தார்.
இம்மூன்று பிரச்னைகளிலும் மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில், தமிழ்நாடு முழுவதும் மக்களைச் சந்தித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கவுள்ளதாகத் தெரிவித்த அவர், பிப்ரவரி 2ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதிவரை நடைபெறக்கூடிய இக்கையெழுத்து இயக்க முடிவுகளை, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து கொடுக்கவுள்ளதாகவும் கூறினார்.