தலைமைச் செயலகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ” வாக்காளர் பட்டியல் நேர்மையாகவும் நியாயமான முறையிலும் வெளியிடப்பட வேண்டும் என மூன்று மனுக்கள் அளித்துள்ளோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, கன்னியாகுமரி தொகுதியில் 40 ஆயிரம் வாக்காளர் பெயர்கள் நீக்கப்பட்டன. அதுபோல் இம்முறை நடந்துவிடக் கூடாது.
கரோனா காலத்தில் இறந்தவர்களின் பெயரை நீக்க என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது ஏழைகளுக்கு உகந்தது அல்ல என்பதால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினோம். 80 வயதுக்கு மேலான முதியவர்கள் அஞ்சல் ஓட்டு போட அனுமதிப்பத்து குறித்தும் தலைமை தேர்தல் அலுவலருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.