தமிழ்நாட்டில் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் வரும் 26ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் அதிமுக, திமுகவுக்கு தலா மூன்று எம்.பி.க்கள் கிடைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 6ஆம் தேதி முதல் மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெறும். இதனால் இவர்கள் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி சிவா 1996, 2002, 2007, 2014 ஆகிய ஆண்டுகளில் திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதில், 1996ஆம் ஆண்டு புதுக்கோட்டை மக்களவை உறுப்பினராகவும், ஏனைய மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
இவர், நாடாளுமன்றத்தில் திருநங்கைகளுக்காக குரல் கொடுத்தார். மாதவிடாய் காலங்களில் பெண்கள் பயன்படுத்தும் நாப்கினுக்கு சரக்கு மற்றும் சேவை வரி கூடாது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு திமுகவின் குரலாக ஒலித்தவர்.
திருச்சி சிவா நாடாளுமன்ற விவகாரங்களை நன்கு அறிந்தவர். இவரின் திறமை, அனுபவம் திமுக எம்.பி.க்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்
வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ ஏற்கனவே வைகோ மாநிலங்களவை உறுப்பினராக மனுதாக்கல் செய்தபோது மாற்று வேட்பாளராக மனுதாக்கல் செய்திருந்தார். வைகோ மீதான தேசத்துரோக வழக்கு அப்போது நடந்துவந்ததால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் அவருக்கு எதிராக வாதாடியவர் என்.ஆர். இளங்கோ. மேலும் திமுகவுக்காக உயர் நீதிமன்றத்தில் அதிக வழக்குகளில் வாதாடியவர்.
வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ கடந்த மாநிலங்களவைத் தேர்தலைப் போன்று இந்தத் தேர்தலில் மூன்றாவது சீட்டுக்கு கடும் போட்டி நிலவியது. அந்தப் போட்டியில் வி.பி. துரைசாமி, அசன் முகம்மது ஜின்னா என கடும் போட்டி நிலவியது. இருப்பினும் அந்தியூர் செல்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அந்தியூர் செல்வராஜ் ஏற்கனவே அமைச்சர் பதவி வகித்த அனுபவமிக்கவர். திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர்களில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் அந்தியூர் செல்வராஜ்.பட்டியலினத்தவருக்கு திமுக வாய்ப்பு வழங்கியிருப்பது வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் திருச்சி சிவா, முத்துக்கருப்பன், செல்வராஜ், டி.கே. ரங்கராஜன், சசிகலா புஷ்பா, விஜிலா சத்யானந்த் ஆகிய ஆறு பேரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், மார்ச் 26ஆம் தேதி காலியாக உள்ள அந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:இந்திய ரயில்களில் 542 கொலைகள், 29 பாலியல் வன்புணர்வு: ஆர்.டி.ஐ.யில் அதிர்ச்சித் தகவல்