2005ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கிய நடிகர் விஜயகாந்த், 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டார். அதில் விஜயகாந்த் மட்டுமே விருத்தாசலம் தொகுதியில் வென்றிருந்தாலும், சுமார் 8.38% வாக்குகளை தேமுதிக பெற்றது. பின்னர், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக, 29 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார் விஜயகாந்த். இதில் 7.96% வாக்குகளை பெற்ற தேமுதிக, திமுகவை புறந்தள்ளி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
அந்தளவிற்கு தமிழக அரசியலில் மிகக்குறுகிய காலத்தில் பெரிய முக்கியத்துவத்தை பெற்றிருந்த தேமுதிக, இன்று அழைப்பார் யாருமின்றி ஏதேனும் ஒரு கட்சி கூட்டணிக்கு அழைக்காதா எனக் காத்துக்கிடக்கிறது. அதற்கு, அடையாளமாக, தேர்தல் நேர பரபரப்புகள் ஏதுமின்றி, கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட, மக்கள் நல கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டு, அதற்காக இடதுசாரிகள், மதிமுக, விசிக என ஊர் ஊராய் அலைந்தனர். அத்தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், மற்ற கட்சிகள் நம்பும் அல்லது தலைமைக்கான கட்சியாக தேமுதிகவை பார்த்தனர். ஆனால், அத்தேர்தலுக்குப் பின் தேமுதிகவை பற்றியும் யாரும் பேசவில்லை. தேமுதிகவும் எந்த பிரச்சனை குறித்தும் பேசவில்லை. விஜயகாந்தின் உடல்நிலை சரிவோடு, தேமுதிகவும் அதன் செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
விஜயகாந்த்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு எதிலும் கவனம் செலுத்த முடியாததால், இன்று கட்சி ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியாமல் திணறுவதாக நம்மிடம் பகிர்ந்து கொண்ட தேமுதிகவின் மூத்த நிர்வாகி ஒருவர், இதனால் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் வருந்தினார். தேர்தல்கள் வரும் போதெல்லாம் மிகவும் பரபரப்பாக காணப்படும் கட்சி அலுவலகம் இன்று தொண்டர்கள் கூட யாருமின்றி இருப்பதாக வேதனை தெரிவித்தார்.