தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் 8 வாரங்களில் நியமனம் - அரசு தகவல்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகள் தீர்வு நடுவத்திற்கு 8 வாரங்களுக்குள் நடுவர் நியமிக்கப்படுவார் என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

highcourt
highcourt

By

Published : Jul 22, 2020, 3:21 PM IST

பிரதமர், மத்திய அமைச்சர்கள், மத்திய அரசு அலுவலர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க லோக்பால் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அதேபோல மாநிலங்களில், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வரிசையில், உள்ளாட்சி அமைப்புகளில் மேயர், துணை மேயர் முதல் பஞ்சாயத்து தலைவர், உறுப்பினர்கள் வரையிலான நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் மீதான ஊழல் புகார்கள், முறைகேடு குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் அமைக்கப்பட்டது.

இந்த நடுவத்தின் நடுவராக முதலில் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் சோ.அய்யர், கடந்த மார்ச் மாதம் வரை அப்பதவியில் நீடித்தார். தற்போது காலியாக உள்ள இப்பதவிக்கு, தகுதியானவர்களை முதலமைச்சர் பரிந்துரைக்க, ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும்.

இந்நிலையில், நடுவரை நியமிக்கும்படி ஆளுநரின் செயலருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிடக் கோரி அன்பழகன் என்ற பத்திரிகையாளர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கரோனா காலமாக தற்போது இருப்பதால் இது தொடர்பாக எந்த கூட்டமும் இதுவரை நடத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும் 8 வாரங்களுக்குள் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் நியமிக்கப்படுவார் எனவும் தெரிவித்தார். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: ஃபாஸ்டேக் கட்டணம் செலுத்தும் முறை - கோளாறுகளை சரி செய்ய உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details