சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கடந்த 2013ஆம் ஆண்டு அரசு கையகப்படுத்தியது. அப்போது பல்கலைக்கழகத்தில் 8,443 ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் 1,110 ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. அதேசமயம் மீதமுள்ள 7,333 பணியாளர்களை உபரி ஊழியர்களாக அறிவித்தது.
மொத்தமுள்ள 8,443 ஆசிரியர் அல்லாத ஊழியர்களையும் பணியில் நீடிக்கும் வகையில் அவர்களின் ஊதியத்தை 21 ஆயிரம் ரூபாயில் இருந்து, 13,900 ரூபாயாக குறைக்க சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில், ஊதிய குறைப்பு தொடர்பாக கருத்துகேட்டு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவு பிறப்பித்தார்.
இதனை எதிர்த்து ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.