தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நியமன வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி - chennai news in tamil

பள்ளிக் கல்வித் துறை இயக்குனரின் அதிகாரங்களை, ஆணையரிடம் ஒப்படைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dismissed appointment of school education commissioner, MHC order
பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு: தள்ளபடி செய்த உயர் நீதிமன்றம்

By

Published : Jun 23, 2021, 3:26 PM IST

சென்னை:பள்ளிக் கல்வித் துறை இயக்குனரின் அலுவலர்களை, ஆணையரிடம் ஒப்படைக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கருணாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," பள்ளிக் கல்வி நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் பெற்ற முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனராகவும், பின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டு வந்தனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக் கல்வி ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, ஐஏஎஸ் அலுவலரை அப்பதவியில் நியமித்து, பள்ளி நிர்வாகத்தை கண்காணித்தது. ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உள்ள நிலையில், எந்த வித சிறப்பு தகுதியும், அனுபவமும் இல்லாத ஆணையர் பதவி என்பது தேவையில்லாதது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை இயக்குனரின் அதிகாரங்களை, ஆணையருக்கு வழங்கி கடந்த மே 14ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது தவறு. ஆணையருக்கு பதிலாக கல்வித் துறையில் அனுபவம் பெற்றவர்களை இயக்குனராக நியமிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 2014ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன் பள்ளிக் கல்வித் துறை ஆணையராக மூன்று ஐஏஎஸ் அலுவலர்கள் பதவி வகித்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அலுவலர்கள் நியமனம் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்குட்பட்டது எனவும், நியமனத்தில் சட்டவிரோதம் இருந்தால் மட்டுமே நீதிமன்றங்கள் தலையிட முடியும் எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து வழக்கு: ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details