தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாட்களை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்: சாலைப் பணியாளர்கள் - தற்போதைய செய்திகள்

சென்னை: தாங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 41 மாதங்களை பணிக்காலமாக அறிவிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாட்களை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்: சாலைப் பணியாளர்கள்
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாட்களை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்: சாலைப் பணியாளர்கள்

By

Published : Feb 25, 2021, 10:25 PM IST

சாலைப் பணியாளர்கள் ஆகஸ்ட்,7 2002ஆம் ஆண்டு அதிமுக அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மீண்டும், பல்வேறு போராட்டத்திற்குப் பிறகு, அதே அரசால் தேர்தல் நெருங்கிய நிலையில் பிப்ரவரி,10 2006 அன்று மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர். எனவே, பணியாளர்கள் 41 மாதங்கள் வேலையில்லாமல் திண்டாடி வந்தனர்.

இந்நிலையில், சாலைப் பணியாளர்களில் தொழில் நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்கான ஊதிய விகிதத்தை மாற்றி, 7ஆவது ஊதியக்குழு பலன்களை வழங்க வேண்டும், 10 விழுக்காடு பஞ்சப்படி, நிரந்தரப் பயணப்படி வழங்க வேண்டும், நெடுஞ்சாலைப் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு வழங்கக்கூடாது மற்றும் ஏற்கெனவே தனியாருக்கு வழங்கிய சாலைகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசு ஏற்கெனவே பேச்சுவார்த்தைக்கு அழைத்த நிலையில், எந்தவித முன்னேற்றமும் இல்லை என்கின்றனர், சங்கத்தின் பிரதிநிதிகள்.

இதன்தொடர்ச்சியாக இன்று (பிப்ரவரி, 25), சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் அலுவலகம் வளாக வாயிலின் முன்பு குடும்பத்துடன், கறுப்பு உடையணிந்து, தொடர் காத்திருப்புப் போராட்டத்தை நடத்த குவிந்தனர். இதனைத்தொடர்ந்து பதற்றம் நிலவியதால், காவல் துறையினர் போராட்டக்காரர்களை அலுவலகத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், சங்கத்தின் உறுப்பினர்கள் காவல் துறையின் கட்டுக்குள் வராததால் வாக்கு வாதம் வெடித்தது. இதனால், போராட்டக்காரர்களை கைது செய்து, ஒரு தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்று தங்க வைத்தனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைப் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் எம். சண்முகராஜா கூறுகையில், "அரசு எங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காவிடில், போராட்டம் தொடரும். நாங்கள் பணியிடை நீக்கத்தில் இருந்தபொழுது, 93 பேர் இறந்துள்ளனர். எனவே இறந்த குடும்பங்களின் நபர்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இதுபோக, சங்கத்தின் மற்ற கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய இவர், ’கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’ என எச்சரித்தார்.

இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் கூறுகையில், 'அரசு உடனே சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்' எனக் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: பகலிரவு டெஸ்ட்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details