சிறை கைதிகள் மற்றும் காவல் துறையினர் தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் இந்திய அளவில் உயர் பொறுப்பில் இருக்கும் ஐ.பி.எஸ். அலுவலர்கள் கலந்துரையாடினர்.
அந்த கலந்துரையாடலில் ஜக்கி வாசுதேவ் பேசியதாவது, "உங்கள் சொந்த புத்திசாலித்தனமே உங்களுக்கு எதிராக செயல்படும் மிக மோசமான நிலையே தற்கொலை ஆகும். ஆகவே, உலகில் உயிர் வாழ்வது தான் உச்சப்பட்ச மதிப்பான செயல் என்பதை உணரும் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் உருவாக்க வேண்டும்.
யோகா பயிற்சி
மனிதர்களின் உள் அனுபவமானது வெளியில் இருந்து சேகரித்த விஷயங்களில் அடிமையாகாமல்,வாழ்வின் அடிப்படை அம்சங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இதற்கு யோகா பயிற்சிகள் உதவி புரியும்.
யோகா மூலம் ஒருவர் தனக்குள் மகிழ்ச்சிக்கான வேதியியல் மாற்றங்களை தானே உருவாக்கி கொள்ள முடியும். இது சமூகம் கட்டமைத்துள்ள வெற்றி கோட்பாடுகள் அல்லது மதிப்பீடுகளுக்குள் சிக்கி உணர்ச்சி சமநிலையை இழக்காமல் அவர்களை பாதுகாக்கும்.
நாட்டில் இருக்கும் சட்டங்கள் மூலம் சட்டத்தை மீறுபவர்களை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். அவர்களுக்குள் உள்நிலை மாற்றத்தை உருவாக்க முடியாது. ஆனால் யோக பயிற்சிகள் மூலம் ஒருவர் தான் விரும்பும் உணர்வை தனக்குள் உருவாக்கி கொள்ள முடியும்.