தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தொலைந்துபோன சிலை கடத்தல் வழக்கு ஆவணங்கள்: அரசு அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு - Tamilnadu Chennai

தமிழ்நாடு முழுவதும் 41 சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்கள் காணாமல்போனது குறித்து விரிவான அறிக்கைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்குகள்
சிலை கடத்தல் வழக்குகள்

By

Published : Sep 2, 2021, 6:51 PM IST

தமிழ்நாடு முழுவதும் சிலை கடத்தல் தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட 41 வழக்குகளின் ஆவணங்கள் தொலைந்துவிட்டதாகவும், இது தொடர்பான விசாரணையை ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலரைக் கொண்டு விசாரிக்க உத்தரவிடக்கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆவணங்கள் காணாமல் போகவில்லை எனவும், அவை வேண்டுமென்றே அகற்றப்பட்டுள்ளதாகவும் யானை ராஜேந்திரன் சார்பில்தெரிவிக்கப்பட்டது.

மேலும், யானை ராஜேந்திரன் கூறியபோது, "இதுவரை 29 சிலைகள் மீட்கப்பட்டு பலர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், ஆவணங்கள் காணாமல்போனதாகக் கூறி வழக்கை விசாரித்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளரே, இந்த வழக்குகளைக் கைவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே, இந்த முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற அலுவலரை நியமிக்க வேண்டும்" என வாதிட்டார்.

தமிழ்நாடு அரசு சார்பில் முன்னிலையான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "1983, 1984, 1989, 1992, 2009 ஆகிய ஆண்டுகளில் பதிவான வழக்குகள் சம்பந்தமான ஆவணங்கள்தாம் காணாமல்போயுள்ளன. இதில், 23 ஆவணங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 18 ஆவணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, ஆவணங்கள் காணாமல்போன 41 வழக்குகளை விசாரித்த அலுவலர்கள் யார் எனவும், காணாமல்போன ஆவணங்கள் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்ன என்றும் விரிவான அறிக்கை தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: 'ராஜிவ் தண்டனை கைதி ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் விடுப்பு வழங்கக்கோரி வழக்கு'

ABOUT THE AUTHOR

...view details