தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ் வாழ்கிறதா...கொல்லப்படுகிறதா... இயக்குநர் தங்கர் பச்சான் ஆதங்கம்! - மத்திய அமைச்சர் அமித் ஷா

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இந்தி திணிப்பு குறித்த பேச்சுக்கு மீண்டும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தமிழ் வாழ்கிறதா!, வளர்கிறதா!, கொல்லப்படுகிறதா! என்பதை தமிழர்களாகிய நாம்தான் சிந்திக்க வேண்டும் என்று இயக்குநர் தங்கர் பச்சான் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் தங்கர் பச்சான்
இயக்குநர் தங்கர் பச்சான்

By

Published : Apr 11, 2022, 7:17 AM IST

சமீபத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷா இந்தி திணிப்பு குறித்து மீண்டும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் விதமாக "ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை பயன்படுத்துங்கள்" என்று கூறியுள்ளார். நாடாளுமன்றத்தின் 37ஆவது அலுவல் மொழிக் கூட்டம் கடந்த ஏப்.7ஆம் தேதி, டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.

அப்போது அமித் ஷா, "ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இந்த முடிவு இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். ஆங்கில மொழிக்கு மாற்றாக, இந்தி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தி மொழி மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டை காக்கலாம்" என்று கூறினார். இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டு மக்களும் சமூக வலைதளங்களில் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர்.

தமிழர்களுக்கு அறிவுரை:இந்நிலையில், தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், தமிழ் மொழியினை தமிழ் பேசும் மக்களாகிய நாம் மெல்ல மெல்ல படர்ந்து வரும் அந்நிய ஆங்கில மொழியின் தாக்கத்திற்கு ஆட்பட்டுள்ளதை உணர்த்தும் விதமாக 'தமிழ்தான் எங்கள் உயிர்' என்கிற தலைப்பில் நேற்று (ஏப்.10) ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், 'இந்தி திணிப்பின்போது, இணையத்தளங்களில் மட்டும்தான் தமிழர்கள் தங்களின் தமிழ்ப்பற்றினை பறைசாற்றிக்கொள்வோம். தமிழில் கல்வி வேண்டாம், ஆலயங்களில் தமிழ் வேண்டாம், நீதிமன்றங்களில் தமிழ் வேண்டாம், திருமண அழைப்பிதழ்களில் தமிழ் வேண்டாம், நாளேடுகளில் தமிழ் வேண்டாம், வீட்டுக்குள்ளேயே தமிழ் வேண்டாம், பொது இடங்களில் தமிழ் வேண்டாம், கடைகள், வணிக நிறுவனங்கள் என எங்கும் எதிலும் தமிழ் வேண்டாம். ஆனால் தமிழ் தான் எங்கள் உயிர் என கூறிக்கொள்வோம்.

தமிழர்களைத் தொற்றிக் கொண்ட பிறமொழி கலாச்சாரம்:குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எவருமே தாங்கள் பேசுவது தமிழ்தானா என புரிந்து பேச மாட்டோம். தொடர்ந்து நான்கு தமிழ் சொற்களை இணைத்து பேசத்தெரியாது. 'ஒரே Tention; எங்கே Meet பண்ணலாம்; கொஞ்சம் Wait பண்ணு; நான் Try பண்றேன்; அது வரைக்கும் என்ன Disturb பண்ணாத; என் Family கிட்ட Consult பண்ணிட்டு சொல்றேன்; நீ கொஞ்சம் Help பண்ணினா Immediate டா வரேன்; Okay வா; Call பண்ணு', இவ்வாறுதான் இன்று பெரும்பாலான தமிழர்களின் நாக்கு உச்சரிக்கின்றன. தூய தமிழில் எவராவது பேசினால் வேற்று கோள்களிலிருந்து இறங்கி வந்தவர்களை பார்ப்பதுபோல் தான் பார்ப்போம்.

தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் நிலை:மூன்று லட்சம் அளவில் சொற்களைக் கொண்ட தமிழ்க்களஞ்சியத்தில் இருந்து சாகும் வரை ஐம்பது சொற்களைக்கூட கையாளத்தெறியாத ஒரு இனமாக தமிழ் இனம் மாறிக்கொண்டிருக்கிறது. ஒரு நிமயம் (நிமிடம்) கூட பிற மொழி சொற்கள் கலக்காமல் பேசவோ, நான்கு வரிகள் அதேபோல, பிழை இன்றி எழுதவோ முடிவதில்லை.

ஆனால், எதற்கெடுத்தாலும் சங்க இலக்கியங்களைப் பெருமையாக மேற்கோள் காண்பித்து தமிழை ஓசையில்லாமல் அழித்துக்கொண்டு 'தமிழ்நாடு' என பெயரிட்ட மாநிலத்தில் தமிழர்கள் எனும் பெயரில் சிறிதும் குற்ற உணர்வின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். கல்வி பயிலாத ஏழை மக்களிடத்தில்தான் சிறிதேனும் இம்மொழி உயிர் வாழ்கின்றது. அதுவும் இந்த தலைமுறையுடன் அழிந்து போகும்" என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: இந்தி எதிர்ப்பின் வரலாறு தெரியுமா..? அமித்ஷாவின் கருத்துக்கு கனிமொழி கண்டனம்...

ABOUT THE AUTHOR

...view details