எந்த மண்ணில் ராஜராஜசோழன் மாமன்னராக கோலோச்சினோரோ அதே தஞ்சை டெல்டா மண்ணில் நின்றுகொண்டுதான் ரஞ்சித் இது போன்ற 'அற்புதங்களை' உதிர்த்திருக்கிறார். திரைப்பட இயக்குநராக இருந்த ரஞ்சித் எப்போது வரலாற்று ஆய்வாளராக மாறினார் என்பதை அவர் மீது அக்கறை உடையவர்கள் ஆராய்ந்து பார்க்காமலே, அவருடைய ஆவேசத்துக்கு அடிபணிந்துவிட்டனர்.
மன்னர் ஆட்சி முறை என்பது தற்போது உள்ள சாமானிய மக்களுக்கு புரிந்திருக்க நியாயமில்லை. அதற்கான தேவைகளும் இப்போது யாருக்கும் ஏற்பட்டுவிட்டதாகத் தெரியவில்லை. அப்படி என்னதான் நடந்தது மன்னராட்சி காலங்களில் என்பதை முற்றும் முதலுமாக அலசி ஆராய்ந்துவிட முடியவில்லை என்றாலும், தற்போதைய தேவைக்கு ஏற்ப அலசியதில், சிலவற்றைத் தெரிந்துகொள்ள நேரிட்டது.
அதில் குறிப்பிடத்தக்கவை என்னவென்றால், மன்னர் ஆட்சி காலங்களில் நாட்டின் மொத்த நிலமும் அவருக்கே சொந்தம் என்பது அடிப்படை. அப்படி மன்னருக்கு சொந்தமான இடத்தில்தான் நாட்டு மக்கள் வசிப்பார்கள், தொழில் செய்வார்கள், அதற்கான வரிகளை செலுத்துவார்கள். அப்போது பட்டாவும் கிடையாது, சிட்டாவும் கிடையாது. இது முழுக்க முழுக்க தற்போதுள்ள மக்களாட்சிக்கு முரண். ஆக, ஒப்பீட்டளவில் இங்கேயே நாம் தவறு செய்கிறோம் என்பதை ரஞ்சித் ஏன் உணரவில்லை என்பதே இங்கு விந்தையாக பார்க்கப்படுகிறது.
அதேபோல், அருள்மொழிவர்மனாக பிறந்த ராஜராஜசோழனுக்கு, ‘ராஜராஜன்’ என்பது கொடுக்கப்பட்ட பட்டம். அந்தப் பட்டத்தை, தான் முன்னின்று கட்டிய தஞ்சை பெரிய கோயில் திறப்பு விழாவில், தலைமைப் பொறியாளர் சிங்காரமல்லருக்கு ‘ராஜராஜ பெருந்தச்சன்’ என்றும், அரசு அறிவுப்புகளை பறையறைந்து வெளியிடுபவருக்கு ‘ராஜாராஜ பெரும் பறையன்’ என்றும் சமதர்ம உணர்வோடு வழங்கியவர் ராஜராஜசோழன். இதற்கான சான்றுகள் கல்வெட்டுகளில் தெளிவாகவே இருக்கின்றன. இது ஒருவகையில் குலத்தொழில் முறைக்கு வித்திடுவதாக இருக்கிறதே என்ற சந்தேகம் வேண்டாம். அப்போது அப்படித்தான் இருந்தது.
குலத்தொழில் முறைதான் பின் நாட்களில் ஆரிய படையெடுப்பிற்கு பின்னர் வர்ணாசிரமமாக மாறியது; மாற்றப்பட்டது. ராஜராஜசோழன் சமூக சீர்த்திருத்தவாதி, சாதி ஒழிப்பு போராளி என்றெல்லாம் இங்கு யாரும் வாதிடுவதில்லை. அதில் நியாயமும் இல்லை. அவர் வெறும் மன்னர் மட்டுமே. அதில் சிறப்பானவராக தன்னை முன்னிறுத்தியிருக்கிறார். அதனால்தான் மாமன்னராக கொண்டாடப்பட்டார், கொண்டாடப்படுகிறார்.
இதற்காக ராஜராஜசோழனின் ஆட்சி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. இங்கு யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல, ரஞ்சித் உட்பட. ஆனால், எப்போது என்ன மாதிரியான விமர்சனங்களை முன் வைக்கிறோம்? யார் மீது வைக்கிறோம்? அந்த விமர்சனத்தால் நாம் எதை மாற்றப்போகிறோம்? என்பதில் நிறைந்திருக்கிறது விமர்சகருக்கான நியாயமும், அந்த விமர்சனத்தின் நோக்கமும்.
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளிவராமல் இருந்த நேரம் அது. சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவின் வெற்றியைக் கொண்டாட கோடிக்கணக்கான கண்கள் விழிபிதுங்கி காத்திருக்கின்றன. அப்போது, “ஆம் எல்லோரையும் போல் வெற்றி தலித்துகளுக்கு அவ்வளவு சுலபம் இல்லை! அது தனித் தொகுதியாக இருந்தாலும்!” என்று பா.ரஞ்சித் ஒரு ட்வீட்டை வீசுகிறார். அங்கு திருமா தோற்றாலும், வெற்றி பெறப்போவது அடுத்த இடத்தில் இருந்த அதிமுகவைச் சேர்ந்த தலித் வேட்பாளர் சந்திரசேகர் என்பதை ரஞ்சித்துகளின் மனங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. திருமாவை பொதுசமூகத்தின் தலைவராக தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ள அவர் கொடுத்திருப்பது 25 ஆண்டுகால உழைப்பு. ஆனால், அவரை மீண்டும் ஒரு சாதிக்குள் அடைக்க முயல்வதை தங்களை அறியாமல் ரஞ்சித்துகள் செய்துவிடுவதுதான் இங்கு பரிதாபத்தின் உச்சம்!
ஆவேச உரை வீச்சுகள் அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் அவசியமாக இருக்கலாம். ஆனால், திரைப்பட இயக்குநர்களுக்கு அது எதற்கு? நிதானமாகவே அணுகலாமே? வரலாற்றில் ஆவேசங்களை விட நிதானங்களே நின்று அடித்திருக்கின்றன. இங்கு நின்று அடிக்கும் நிதானம்தான் அவசியம், வீண் ஆவேசங்கள் தேவையில்லாத ஆணி.
ஆங்கிலத்தில், ‘இன்கிளூசிவ் பாலிடிக்ஸ்’ என்பார்கள் - அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியல் என்பதே அதன் பொருள். திருமா அதை செய்ய ஆரம்பித்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த இடத்தில் திருமா ஏன் குறிப்பிடப்படுகிறார் என்றால் அதுவே தற்காலத் தேவையாக இருக்கிறது. அதை ரஞ்சித் உணரவேண்டும் என்பதே காலத்தின் தேவையாகவும் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சாதி ஏற்றுத்தாழ்வுகளை மையமாக வைத்து அரசியல் செய்வதற்கு இங்கு ஏராளமானோர் இருக்கின்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் தொடங்கி இடைநிலை சாதிகள், பிற்படுத்தப்பட்டவர்கள் என சங்கம் இல்லாத சமூகங்களே இல்லை என்ற அளவுக்கு இங்கு நிரம்பி வழிகின்றன. அந்த குட்டைக்குள் ரஞ்சித் வீழ நினைத்தால் அது அவரின் நிலைப்பாடு.
இங்கு போராட எண்ணற்ற அரச பயங்கரவாதங்கள் இருக்கின்றன. ஹைட்ரோகார்பன், எட்டு வழிச்சாலை, மீத்தேன், ஸ்டெர்லைட், ஏழு பேர் விடுதலை என பல திணிப்புகள் இருக்கின்றன. இதற்கு எதிராக குரல் கொடுத்து வெல்வதற்கே ரஞ்சித் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கின்றது. இப்படி எண்ணற்ற பொதுப் பிரச்னைகள் இருக்கையில், புதுப் பிரச்னைகள் ஏன்? விமர்சனங்களை முன்வையுங்கள், அவதூறுகள் வேண்டாம். வழிநடத்துங்கள் ரஞ்சித், வழி நடக்காதீர்கள்!
யார் ஒப்புக்கொண்டாலும், இல்லாவிட்டாலும், யாருக்கு கசந்தாலும், கசக்காவிட்டாலும் இந்தியாவின் தலைசிறந்த முற்போக்கு மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது. சாதிய ஒடுக்குமுறைகள் ஆரம்பமானதே மாமன்னராக கொண்டாடப்படும் ராஜராஜசோழன் காலத்தில்தான் என்ற புரட்டு வாதங்களை முன்வைக்கிறேன் பேர்விழி என்று தமிழ் சமூகத்தின் வரலாற்றைத் திரித்துவிட பொது எதிரிகளுக்கு வாய்ப்பு கொடுத்துவிடாதீர்கள் மிஸ்டர் ரஞ்சித்!
சேர்த்துக்கொள்ளுங்கள்... சேர்ந்தே பயணிப்போம்... நிறைய வேலைகள் இருக்கின்றன..!