பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மாணவர்கள் பருவமழை காலத்தில் பள்ளிக்கு வரும்போது மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை வழங்கியுள்ளார்.
அதில், 'மாணவர்கள் பள்ளிக்கு மிதிவண்டியில் வரும்போது சகதிகளில் வழுக்கி விழக்கூடிய அபாயத்தை எடுத்துக்கூறிப் பாதுகாப்பாக வர அறிவுரை கூற வேண்டும். மழைக்காலங்களில் மாணவர்களும் அவர்களின் உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் வகையில் மழைக்கு உகந்த உடைகள் அல்லது குடையோ பயன்படுத்த அறிவுரை வழங்க வேண்டும்.
மழையின் காரணமாகப் பள்ளியில் ஏதேனும் வகுப்பறைகள் பாதிக்கப்பட்டு இருப்பின், அத்தகைய வகுப்பறைகளைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பாகப் பூட்டி வைத்து, அவற்றின் அருகே மாணவர்கள் செல்லாத வகையில் கண்காணிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த் தேங்கும் பள்ளங்கள், திறந்தவெளிக் கிணறுகள், கழிவுநீர்த் தொட்டிகள், நீர்த் தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில், அவை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா? என்பதை உறுதி செய்யவேண்டும்.
பள்ளியில் மின்கசிவு ஏதேனும் உள்ளதா? என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்தல் வேண்டும். பள்ளியின் மேற்கூரை உறுதியாக உள்ளதா என்பதை ஆய்வுசெய்வதுடன், மேற்கூரையில் நீர் தேங்காத வகையில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயிர் மின் அழுத்தம் உள்ள மின் கம்பங்களையும், அழிந்து போகக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அதை உடனடியாக அகற்ற வேண்டும்.
தொடர்ந்து மழை பெய்தால் பள்ளியின் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவர் அருகே மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். பள்ளி மேற்கூரையில் தேங்கியுள்ள இலைகள், குப்பைகளை அகற்றி, மழைநீர் கூரைகளின் மேல் தங்காமல் மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குச் செல்லுமாறு வழிவகை செய்ய வேண்டும்.