சென்னை:கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன், தருமபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். இவர், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த காலக்கட்டமான 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதனடிப்படையில் தருமபுரி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கே.பி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் கே.பி.அன்பழகன் தேர்தலின் போது கணக்கு காட்டிய சொத்துக்களின் மதிப்பை வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 ரூபாய் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது என லஞ்ச ஒழிப்பு துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.