சென்னை:பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜெ. கிருஷ்ணகுமார் என்பவர் தாக்கல்செய்துள்ள வழக்கில், பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் அருகே பல்லடம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, பாலக்காடு செல்லும் நெடுஞ்சாலை ஆகியவற்றில் போக்குவரத்திற்கும், மக்கள் நடமாட்டத்திற்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு வழிவகை செய்ய பொள்ளாச்சி நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை ஆகியவற்றிற்கு உத்தரவிட வேண்டுமெனக் கோரிக்கைவைத்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நெடுஞ்சாலைத் துறை தரப்பில் எட்டு வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்ற நீதிபதிகள் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க வாய்ப்பளித்து, அதன் பின்னர் ஆக்கிரமிப்புகளை எட்டு வாரங்களில் அகற்ற வேண்டுமெனவும், அதற்கடுத்த இரண்டு வாரங்களில் அந்த நடவடிக்கை தொடர்பாக விவரங்களைத் தாக்கல்செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
இதையும் படிங்க: பணி நிறைவுபெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவு ரத்து