சென்னை: தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணியை நவம்பர் 6ஆம் தேதி நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு காவல்துறை அந்த பேரணிக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் அமைதிப் பேரணி நடத்த தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்தது. தமிழ்நாடு அரசின் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று(செப்-30) விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆர்எஸ்எஸ் தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, "ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி நிபந்தனைகளை வகுத்து நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். நீதித்துறையை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டதால் நடைபெறும் போராட்டங்களை காரணம் காட்டி, எங்களது ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கமுடியாது.
கடந்த 2013ஆம் ஆண்டு அம்பேத்கர் பிறந்த நாளன்று பேரணி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காவல்துறையில் மூன்று நாட்களுக்கு முன் மனு கொடுத்துவிட்டு, உடனடியாக நீதிமன்றத்தை நாடியபோது, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஊர்வலத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டும், அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
யாருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்ப மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்த பிறகும் காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பதன் அர்த்தம் புரியவில்லை. ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல்துறை கூறிவருகிறது என வாதிட்டார்.
அதன்பின் மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன் ஆஜராகி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது தான் காவல்துறையின் கடமை என்று பல முறை அறிவுறுத்தி உள்ளதாகவும், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தடையை எதிர்த்து கடுமையான போராட்டம் நடைபெறும் கேரளாவிலும், புதுச்சேரியிலும் அனுமதி வழங்கபட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது என வாதிட்டார்.