சென்னை:அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர்களைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பரப்புரை முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை காணொலி பதிவுசெய்ய வேண்டும், பறக்கும் படைகளை அமைத்து பணப்பட்டுவாடாவைத் தடுப்பதுடன் தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்து மனு அளித்திருந்தார்.
இந்த மனுவைப் பரிசீலிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக தேர்தல் பிரிவுத் துணைச் செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், ஒன்பது மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியிருந்தார்.
தேர்தலின்போது பின்பற்றக்கூடிய நடைமுறைகள்
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, எதிர்க்கட்சியின் கோரிக்கை மனுவைப் பரிசீலித்து முடிவை தெரிவிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று (செப். 30) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அதிமுக சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் தொடர்ச்சிதான் இது எனவும், கடந்த தேர்தலின்போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை இந்தத் தேர்தலிலும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.