தமிழ்நாட்டில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் மூலம், இடைநிலை ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படிப்பில் சேர்வதற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். கடந்த 2002 ஆம் ஆண்டு வரை இடைநிலைப் பட்டயப் படிப்பு முடித்தவர்கள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் கற்பித்தனர்.
மேலும், இவர்களுக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2003 ஆம் ஆண்டிலிருந்து 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் பணியில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர்.
இடைநிலை ஆசிரியர் பட்டயப் படிப்பு முடித்தவர்கள், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் எடுக்க அறிவுறுத்தப்பட்டனர்.
அதேபோல், தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேர்க்கை விகிதம் மிகவும் குறைந்து வருவதால், தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அதிகளவில் மூடப்பட்டு வருகின்றன. கடந்த 2015 ஆம் ஆண்டில் 30 அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 39 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், 402 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் செயல்பாட்டில் இருந்தன.
இதுவே, 2017 ஆம் ஆண்டில் 32 அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களாகவும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களாகவும், 7 வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களாகவும், 33 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களாகவும், 279 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களாகவும் இருந்தன.
பின்னர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை 32 லிருந்து 12 ஆக குறைக்க, கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. மேலும், தேசிய ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் 30 சதவீதத்திற்கு குறைவாக மாணவர்கள் சேர்க்கை இருக்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இதனால் கடந்த 2015 ஆம் ஆண்டில் 402 ஆக இருந்த தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், இந்த கல்வியாண்டில் 48 ஆக மிகவும் குறைந்துள்ளது. அதேபோல், 39 ஆக இருந்த அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 14 ஆகியுள்ளன.
மேலும், இந்தக் கல்வியாண்டில் 12 அரசு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், 14 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், ஆறு வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், அரசால் நேரடியாக மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
இதனால் கடந்த 2015 முதல் 2020 ஆண்டு வரை மட்டும், 386 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் அனுமதியை அரசு ரத்து செய்துள்ளது.
இதையும் படிங்க: தேசிய கல்விக் கொள்கை: ஆசிரியர்களிடம் கண்துடைப்பு கருத்து கேட்பு - பழ. நெடுமாறன் கண்டனம்!