தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வன்னியர் ஒதுக்கீடு பெற்று தந்தது ராமதாசா? ராமமூர்த்தியா? வரிசை கட்டும் சர்ச்சைகள்! - தமிழ்நாடு அரசு

சென்னை: மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கி அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், உண்மையிலேயே அதனை பெற்றுத் தந்தது யார் என்பதிலும், சட்டம் இயற்றப்பட்ட முறையிலும் சர்ச்சைகள் வரிசைக்கட்ட தொடங்கியுள்ளன.

assembly
assembly

By

Published : Mar 1, 2021, 6:58 PM IST

Updated : Mar 1, 2021, 7:13 PM IST

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட 21 சமூகங்கள் அடங்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வன்னியர்களுக்கென தனியாக 20% இட ஒதுக்கீடு வேண்டும் என வலியுறுத்தி, பாமக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் அதிமுக பாமக கூட்டணி உடையும் என்ற நிலை இருந்தது. இதையடுத்து அதிமுகவுடன் பாமகவிற்கு மனக்கசப்பு நிலவியது. இதையடுத்து அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து பேசினர். ஆனால் உடன்பாடு எட்டப்படாததால், சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து அரசு ஆணையிட்டது.

இருப்பினும், அரசின் முடிவை கண் துடைப்பு என விமர்சித்தது பாமக. இதனால் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனிடையே 25 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர், 26 ஆம் தேதி தேர்தல் தேதி மாலை அறிவிக்கப்பட இருந்ததால், அதற்கு முன்னதாக மாலை 3 மணிக்கு தொடங்கியது. அதில், மிகவும் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். மேலும் அதற்கு அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, அரசிதழிலிலும் வெளியானது. அடுத்த ஓரிரு நாளில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் பெற்றது பாமக. ஆனால், கடைசி நேர செயல்பாடுகளால் இதனை முழுமையாக நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உள் ஒதுக்கீடு அறிவித்தபின் உறுதியான அதிமுக-பாமக கூட்டணி!

இது தொடர்பாக பேசிய அதிமுக செய்தித்தொடர்பாளர் பாபு முருகவேல், ”வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு, நிச்சயம் செயல்படுத்தும் திட்டம்தான். முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், கருணாநிதியால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 20% இட ஒதுக்கீட்டில் தான், சட்டங்களுக்கு உட்பட்டு உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதிமுகதான் ஆட்சிக்கு வரும் என்பதால், அப்போது அரசாணையிட்டு அமல்படுத்தப்படும். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனக்கிருக்கும் அரசியல் ஞானத்தின் அடிப்படையிலும், சட்டப்படியும் இச்சட்டத்தை இயற்றியிருக்கிறார். இதில் எந்த சட்டச்சிக்கலும் இல்லை” என்றார்.

’வன்னியர் உள் ஒதுக்கீட்டில் எந்த சட்டச்சிக்கலும் இல்லை'

அதேவேளையில், ராஜதந்திரமாக செயல்பட்டு ஒரு மணி நேரத்தில் சட்டம் இயற்றியதாக இந்த அரசு கருதி மகிழ்ந்தால் அது பகல் கனவாகவே முடியும் என்கிறார் மூத்த வழக்கறிஞர் இளங்கோவன். மேலும் அவர் கூறும்போது, ”வன்னியர்களுக்கான இந்த கோரிக்கை காலங்காலமாக உள்ளதுதான். இதற்காக சி.என்.ராமமூர்த்தி தொடுத்த வழக்கின் தீர்ப்பின்பேரில், ஜானர்த்தனன் ஆணைய பரிந்துரைதான் இந்த10.5% இட ஒதுக்கீடு என்பது. ஆனால், இந்த கோரிக்கையை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன் பாமக கையில் எடுத்தது. அதனை ஏற்று அவசரப்பட்டு அரசும் சட்டமியற்றியுள்ளது. இது தேர்தலுக்கானதா அல்லது நாட்டின் சட்டமியற்றும் ஜனநாயகத் தன்மையை கேலிக்கூத்தாக மாற்றிவிட்டார்களா எனத் தெரியவில்லை.

20% ஒதுக்கீட்டில் அடங்கியிருக்கும் மிகவும் பிற்பட்ட மற்ற சமூகங்களுடன் பேசிய பின், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கியிருந்தால் தான் அது சரியானதாக இருக்கும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து அதில் வன்னியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை பார்க்காமல், உள் ஒதுக்கீடு கொடுத்திருப்பது தவறானது. அரசு ஏற்கனவே வழங்கிய இட ஒதுக்கீட்டில் வன்னியர்கள் எத்தனை பேர் அரசு பணியில் சேர்ந்துள்ளனர் என்பதற்கான எந்த புள்ளி விவரமும் இல்லை. மக்களுக்கான இதுபோன்ற பிரச்சனைகளை அரசியலைத் தாண்டி விவாதிக்கும் நிலையில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியும் இல்லை.

’இது, அதிமுகவிற்கு எதிர்வினையை தான் ஏற்படுத்தும்'

மிகவும் சுருங்கிப்போன வாக்கு வங்கியான பாமகவிற்கு, ஊட்டச்சத்தை அளிக்கும் மருந்தாக உள் ஒதுக்கீட்டு சட்டத்தை அதிமுக அரசு இயற்றித் தந்துள்ளது. இதனால் அமைச்சரவையில் உள்ள வன்னியர்களான சி.வி. சண்முகத்திற்கோ, கே.பி. அன்பழகனுக்கோ ஒன்றும் நடக்கப்போவதில்லை. ஒட்டுமொத்த வெளிச்சத்தையும் எடுத்துக் கொள்பவர்கள் ராமதாசும், அன்புமணியும்தான். இதனால் பிற சமூகத்தினர் தங்களை தனிமைப்படுத்தப்பட்டதாக எண்ணும் அளவிற்கு, அரசு இதனை செய்துள்ளது. ஒவ்வொரு ஜாதியும் மோதவிட்டு, அந்த ஜாதிக்கு தான் ஆதரவு எனக் கருத வைப்பது என்ற ஆர்எஸ்எஸ் நோக்கத்தை அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளது. போக்கான இது, அதிமுகவிற்கு எதிர்வினையை தான் ஏற்படுத்தும்” என்றார்.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்ததாக பாமக நிறுவனர் ராமதாசிற்கு அக்கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், தன்னுடைய வழக்கின் அடிப்படையில் பெற்ற இச்சட்டத்தை, தான் பெற்றுத்தந்ததாகக்கூற எந்த இழிபிறவிக்கும் உரிமையில்லை எனக் காட்டமாகக் கூறுகிறார், வன்னியர் சங்க கூட்டமைப்பின் நிறுவனரான சி.என்.ராமமூர்த்தி. ”வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் என்னுடைய வழக்கின் நெருக்குதலால் அரசாணை (எண் 35 /2012) பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான ஆணையம் இட ஒதுக்கீட்டை பகுத்து வழங்கி, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது.

’நான் அறிவை ஆயுதமாக ஏந்தி போராட்டம் நடத்தி சட்டம் பெற்றுள்ளேன்'

அந்தப் பரிந்துரையின் அடிப்படையிலும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களை தொடர்ந்து சந்தித்து நான் வலியுறுத்தியதால் இது இன்று சாத்தியமாகியுள்ளது. பாமக சார்பில் கிராம நிர்வாக அலுவலருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் மனு அளித்தனர். இது தான் போராட்டமா? ரயில் மீது கல் எறிவது தான் போராட்டமா? நான் அறிவை ஆயுதமாக ஏந்தி போராட்டம் நடத்தி சட்டம் பெற்றுள்ளேன்” எனக் கூறினார். அவசர கதியில் சட்டமாக்கப்பட்டுள்ள வன்னியர் உள் இட ஒதுக்கீடே விவாதப் பொருளாகியுள்ள நிலையில், அது சட்டமாகியுள்ளதற்கு தான் தான் காரணம் என ராமதாசும், ராமமூர்த்தியும் கச்சை கட்டிக்கொண்டு உரிமை கொண்டாடுவதால், அச்சமூக மக்கள் நடப்பது என்னவென்று புரியாமல் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

உள் இட ஒதுக்கீட்டால் இழந்ததை பெறப்போகிறதா பாமக?

இதையும் படிங்க: சாதி அடிப்படையில் வேட்பாளர் தேர்வு செய்யவில்லை - மநீம பொதுச்செயலாளர்

Last Updated : Mar 1, 2021, 7:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details