சென்னை: கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பாராட்டு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேப்டன் தோனி, ஸ்ரீனிவாசன், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில் தேவ், ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபா குருநாத் ஆகியோர் விழா மேடையை அலங்கரித்தனர்.
இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசை வழங்கினார். எம்.கே.ஸ்டாலின் எனப் பெயர் பொறிக்கப்பட்ட சிஎஸ்கே ஜெர்சியை முதலமைச்சருக்கு தோனி வழங்கினார்.
இதையடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின், சிஎஸ்கே வீரர்களுக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.
கடைசிப் போட்டி சென்னையில்தான்
விழாவில் தோனி பேசியதாவது, "2008ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்ததில் இருந்து சென்னை மீதான உறவு எனக்கு தொடங்கியது.
முதல் டெஸ்ட் போட்டி நான் விளையாடியது சென்னையில்தான், அப்போதே தொடங்கியது சென்னையுடனான என் உறவு. சென்னையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியின்போதும் ரசிகர்கள் கொடுத்த ஆதரவும் அன்பும் மிகப்பெரியது.
சென்னை அணியின் ரசிகர்கள் பலம் தமிழ்நாட்டை சார்ந்தது மட்டுமல்ல, அதையெல்லாம் கடந்தது. என்னுடைய கடைசி போட்டியும் சென்னையில் தான். அடுத்த ஆண்டோ அல்லது ஐந்து ஆண்டுகள் கடந்தாலும் கூட அது சென்னையில் வைத்துதான்" எனப் புன்னகை பூத்த முகத்துடன் உரையை நிறைவுசெய்தார்.
மஞ்சள் தமிழர் தோனி
இதன்பின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, பேசிய அவர், "நான் முதலமைச்சராக வரவில்லை. தோனியின் ரசிகனாக குடும்பத்தோடு வந்திருக்கிறேன்.
இப்போது எனது மனது முழுவதும் பத்து நாள்கள் இருக்கும் வெள்ளப்பாதிப்பை குறித்து மட்டும்தான் உள்ளது. அதைத்தான், நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
எப்படி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற நெருக்கடி நேரத்தில் சற்று இழைப்பாரவே இங்கு வந்துள்ளேன். மேலும் தோனியைப் பாராட்டவும்தான். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக, தோனி உள்ளார்.
தோனி புகழ்பாடிய முதலமைச்சர்
தமிழர்கள் என்றால் பச்சைத் தமிழர்கள் என்பது போல், 'தோனி' ஒரு மஞ்சள் தமிழர். தமிழர்கள் அனைவருக்கும் பிடித்ததுபோல முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் தோனியைப் பிடிக்கும்.
ஒன்ஸ் மோர் சொன்ன முதலமைச்சர்
தோனியின் சதங்கள், ஸ்டைலாக அடித்த ஹெலிகாப்டர் ஷாட்கள் ஆகியவற்றை யாராலும் மறக்க முடியாது. இந்தியாவில் கிரிக்கெட் என்றால், டெண்டுல்கர் என்று சொல்லிவந்த நிலையில், தற்போது 'தோனி' என்றால் கிரிக்கெட் என்று சொல்லும் அளவுக்கு உள்ளார்.
ஆட்சி பொறுப்பேற்றதும், சில திட்டங்களை அறிவிக்கும்போது, பல கிரிக்கெட் ரசிகர்கள், நான் தினமும் ஒரு சிக்ஸர்களை அடிக்கிறார் எனக் கூறினார்கள். அப்போது எல்லாம் நான் தோனியை நினைத்துக்கொண்டேன்.
நெருக்கடி நிலையிலும் எப்போதும் கூலாக இருப்பவர்கள் கருணாநிதி, தோனியும்தான். அடித்தட்டிலிருந்து வந்து இவ்வளவு பெரிய உயரத்தை தோனி அடைந்துள்ளார்.
டூ பிளேசிஸ், பிராவோ போன்ற மூத்த வீரர்களையும், ருதுராஜ் போன்ற இளம் வீரர்களையும் ஒருங்கிணைத்து இந்த வெற்றியை தோனி பெற்றுள்ளார். அத்தகைய ஆளுமை மிக்கவர் தோனி.
'டியர் தோனி, வீ வான்ட் யூ லீட் சிஎஸ்கே ஃபார் மெனி மோர் சீசன் (Dear Dhoni, We want yout to lead CSK for many more season - அன்புள்ள தோனி, நீீங்கள் சிஎஸ்கே அணிக்கு பல தொடர்களில் கேப்டனாக செயலாற்ற வேண்டும்)'. ஒன்ஸ் மோர் கேளுங்க நான் சொல்றேன்,'டியர் தோனி, வீ வான்ட் யூ லீட் சிஎஸ்கே ஃபார் மெனி மோர் சீசன்' "என்றார்.
இதையும் படிங்க: தோனிக்காகக் காத்திருக்கிறது சென்னை: ஸ்டாலின் அடித்த விசில்!