தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தவறு செய்யும் அலுவலர்களை காப்பாற்றுவது ஏன்? - அரசுக்கு நீதிபதிகள் கண்டனம்!

சென்னை: மாநில கூர்நோக்கு குழு உத்தரவிட்டும் சாதி சான்றிதழ் வழங்காத கோட்டாட்சியருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, இதுபோன்ற அலுவலர்களை காப்பாற்ற முன்வரக்கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

By

Published : Jun 12, 2020, 5:04 PM IST

Updated : Jun 12, 2020, 5:10 PM IST

highcourt
highcourt

தருமபுரி மாவட்டம் சின்னகாணஹல்லியைச் சேர்ந்த ஜெயலட்சுமி, தனது குழந்தைகளுக்கு பழங்குடியினர் பிரிவு சான்றிதழ் கோரி தருமபுரி வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார். அது நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநில அளவிலான கூர்நோக்கு குழுவுக்கு அவர் விண்ணப்பித்திருந்தார்.

பழங்குடியினர் என உறுதி செய்த கூர்நோக்கு குழு, ஜெயலட்சுமியின் குழந்தைகளுக்கு சான்றிதழை வழங்க உத்தரவிட்டிருந்தது. அப்போதும், பழங்குடியினர் சான்றிதழ் வழங்கப்படாததால் உயர் நீதிமன்றத்தில் ஜெயலட்சுமி வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், எனவே இரண்டு வார கால அவகாசம் வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், மாநில கூர்நோக்கு குழு பரிந்துரைத்த பிறகும் சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பது ஏன்? எதற்காக மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்ற, அதிகாரிகளால்தான் அரசின் நற்பெயர் கெடுகிறது என்றும், இதுபோன்ற அலுவலர்களை அரசு காப்பாற்ற நினைக்கக்கூடாது என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழிக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதிகள், அதை கரோனா நிவாரண நிதிக்கு செலுத்துமாறும் உத்தரவிட்டனர். மேலும், வரும் திங்கள்கிழமை சாதி சான்றிதழோடு சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் காணொலி மூலம் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்ந்து, ஏற்கனவே இருந்த வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி மற்றும் தற்போதைய வருவாய் கோட்டாட்சியர் தணிகாசலம் ஆகியோர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஏன் பரிந்துரைக்கக்கூடாது என்பது குறித்தும் அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: உலகத்திலேயே கேவலமாக ஊரடங்கை அமல்படுத்தியது தமிழ்நாடு அரசுதான் - ஸ்டாலின்

Last Updated : Jun 12, 2020, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details