சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் தீவிரமாக பரவி வருவதால், முன்கள பணியாளர்கள் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதில் பல பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். குறிப்பாக கடந்த இரண்டு வருடமாக ஊரடங்கு கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு, தேர்தல் பாதுகாப்பு பணிகள் என தொடர்ந்து அயராமல் உழைத்து வரக்கூடிய தமிழ்நாடு காவல்துறையில், இதுவரை 4289 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 84 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனால் தொடர்ந்து ஓய்வில்லாமல் பணியாற்றுவதால் காவலர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருவதை காண முடிகிறது. இதனால் உடனடியாக காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு வழங்க வேண்டுமென சமூக செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்; டிஜிபி திரிபாதிக்கும் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் மண்டல ஐஜிக்கள், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்றை டிஜிபி பிறப்பித்துள்ளார். அதாவது, சுழற்சி முறையில் 20 விழுக்காடு காவலர்களுக்கு விடுப்பு வழங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 10 விழுக்காடு காவலர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை வழங்கிய நிலையில், தற்போது அதை 20 விழுக்காடாக உயர்த்தி டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.