சென்னை:தமிழ்நாடு காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு அனைத்து காவல் துறையினருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "2021ஆம் ஆண்டு பல்வேறு சவால்களை தமிழ்நாடு காவல் துறை வழக்கம்போல் தைரியமாக எதிர்கொண்டது. ஜல்லிக்கட்டு, தேவர் குரு பூஜை, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள், மதுரை சித்திரை திருவிழா, திருவண்ணாமலை தீபம் போன்ற பெரிய நிகழ்ச்சிகள் அமைதியான முறையில் நடத்தி முடித்துள்ளோம்.
சட்டம் ஒழுங்கு திறம்பட பேணி காக்கப்பட்டது. குற்றப்புலனாய்வில் மெச்சத்தகும் வகைக்கில் இருந்தது. காவல் துறையின் பணி சிறப்பாக இருந்தது. இவை அனைத்திற்கும் காரணம் காவல் துறையிலுள்ள அலுவலர்கள், ஆண், பெண் காவலர்கள் தான். இவர்களின் அர்ப்பணிப்பும் அனைத்து சூழ்நிலையிலும் அரண்போல நின்றதாலேயே சாத்தியமானது.
தென்மாவட்டங்களில் நடைபெற்ற சாதிய தொடர்பான கொலைகளில் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம். அதைபோல சாதி அரக்கனின் பெயரால் நடந்த கொலைகளில் கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் வடதமிழ்நாட்டில் பழிக்குபழி வாங்கும் ரவுடிகளின் அட்டகாசத்தை ‘ஆபரேசன் ரவுடி வேட்டை’ என்ற பெயரில் ஒடுக்கி வருகிறோம்.
கருணை அடிப்படையில் பணி
அதன் விளைவாக தமிழ்நாடு முழுவதும் கடந்த 2021ஆம் ஆண்டு 3ஆயிரத்து 325 ரவுடிகளை கைது செய்துள்ளோம். ஆயிரத்து 117 அபாயகரமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளோம். போதைப் பொருளுக்கு எதிராக ‘drive against drugs (DAD)’ என்ற பெயரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 23 டன் கஞ்சா, 20 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்துள்ளோம். கரோனாவிற்கு எதிரான போரில் ஈடுபட்டு 139 காவல் துறையினரை இழந்துள்ளோம்.
இத்தகைய கடினமான பணிச் சூழலில் தமிழ்நாடு அரசு காவல் துறையினருக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கியும், காவல் துறையினரின் தங்கும் குடியிருப்பை 750 சதுர அடியாக உயர்த்தியும், காவல் துறையினரின் துறை ரீதியிலான நடவடிக்கைகளை ரத்து செய்தும் உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல் துறையினரின் ஆயிரத்து 67 வாரிசுகளுக்குத் தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிபெற்று கொடுக்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையின் பேரில் ஆயிரத்து 500 பேருக்கு காவல் துறையில் பணி வழங்கப்பட்டுள்ளது.