சென்னை: கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட மடிப்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தவில்லை என அய்யம்பெருமாள் என்பவர் 2019 இல் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் தரப்பில் 160 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட அறிக்கை கிடைத்தவுடன், நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகளை 2020ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி பணிகள் முடிக்கப்படவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திட்டத்தை முடிக்க மேலும் அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், மக்களுக்கான அனைத்து திட்டங்களையும் வகுப்பதுடன், அவற்றை செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை முடிவு செய்யும் அரசு, அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் திட்டங்களை செயல்படுத்தி முடிப்பதில்லை என அதிருப்தி தெரிவித்தனர். நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, அதில் உத்தரவு பிறப்பித்தாலும் செயலப்படுத்துவதில்லை என்றும் தெரிவித்தனர்.