சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியம், 2019ஆம் ஆண்டு ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தியது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத உதவியாளர்களை நியமிக்கக் கோரியும், தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரியும், கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில் 2019ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கண் பார்வையற்றவர்கள் தேர்வெழுத உதவியாளர்களை நியமிக்கவும், கூடுதல் நேரம் ஒதுக்கவும், அது சம்பந்தமாக வழிகாட்டு விதிகளை வகுக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று கடந்த 9ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும், தேர்வில் பார்வை மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் வகையில் எந்த வழிகாட்டு விதிகளையும் அறிவிக்கவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆசிரியர் தேர்வில் பார்வை மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கும் வகையில் உரிய வழிகாட்டி விதிகளை வகுக்காமல், தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியாது என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:10.5% வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு