இன்று அதிகாலை கரையை கடந்த நிவர் புயலின் தாக்கத்தால், சென்னையின் சில இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. ஆங்காங்கே மரங்களும், மின்கம்பங்களும் பெயர்ந்து சாலையில் வீழ்ந்தன.அவற்றை பாதுகாப்பாக அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தரமணியில் உள்ள பெரியார் நகர், பாரதி நகர், உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அவர், அதனைத் தொடர்ந்து வேளச்சேரி பகுதியில் உள்ள ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று அப்பகுதியினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அம்பேத்கர் நகரில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்திற்கு சென்ற துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதேபோல ராஜா அண்ணாமலை புரம் பகுதிக்கும் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கினார்.
மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய ஓபிஎஸ்! இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில், நிவர் புயல் காரணமாக குடிசைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்தும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படிங்க:’புயலால் சேதமடைந்த பயிர்களுக்கு விரைவில் இழப்பீடு’