சென்னை: மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார்.
மக்களவை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 29 ஆம் தேதி தொடங்குகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், மூன்றாவது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த நிலையில், மாநிலங்களின் கருத்துக்களை கேட்டறியும் வகையில், மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் நிதி குறித்த கோரிக்கைகளை முன்வைத்தார்.
அவர், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி சீரான முறையில் இருந்து வருவதாகவும், 15 வது நிதிக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் 2 ஆயிரத்து 577 கோடி ரூபாய் தற்போது வரை விடுவிக்கபடாமல் உள்ளதாகவும், அதனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.