சென்னை: இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பல்வேறு திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்க நடவடிக்கைகளை எடுத்துவருகிறார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை, நவீன ரோவர் உபகரணங்களைப் பயன்படுத்தி அளவீடு செய்யும் பணிகளை செப்டம்பர் 8 அன்று பி.கே. சேகர்பாபு தொடங்கிவைத்தார்.
ரோவர் கருவியின் சிறப்பம்சம்
இந்த ரோவர் கருவிகள் மூலம் திருக்கோயில் நிலங்கள் அளவிடப்படும். ஆக்கிரமிப்புகள் மற்றும் காணாமல்போன புல எல்லைக் கற்களை எளிதில் கண்டறியலாம். நவீன கருவிகள் கொண்டு துல்லியமாக அளப்பதன் மூலம் திருக்கோயில்களுக்கு வருவாய் அதிகப்படுத்தலாம். நவீன இயந்திரங்கள் மூலம் கோயில் நிலங்கள் அளவிடப்பட்டுவருகின்றன.
இதுவரை திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த 424 நபர்களிடமிருந்து திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் 407.63 ஏக்கரும், 398.1582 கிரவுண்ட் மனைகளும், 16.778 கிரவுண்ட் கட்டடமும், 15.597 கிரவுண்ட் திருக்குளமும் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இதுவரை மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய மதிப்புத் தொகை ரூபாய் 1543.90 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு - 6 வாரங்களுக்கு தள்ளி வைப்பு