டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பாடத்திட்டத்தில் இருந்து, தமிழ் எழுந்தாளர்கள் பாமா, சுகிர்தராணி படைப்புகளை பாடத்திட்ட மேற்பார்வைக் குழுவினர் ஆகஸ்ட் 24ஆம் தேதி நீக்கியுள்ளனர். பேராசிரியர்களின் ஒப்புதல் இல்லாமலேயே இந்த நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், பாமா எழுதிய 'சங்கதி', சுகிர்தராணி எழுதிய 'கைம்மாறு' ஆகிய மொழியாக்கப் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் பட்டியலின எழுத்தாளர்களாவர். இதற்கு, எதிப்பு தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீக்கப்பட்ட பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்ணுரிமையையும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலையையும் பேசும் பாமா, சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகள் பேராசியர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் பாடத்திட்ட மேற்பார்வைக் குழுவினரால் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. எழுத்துகளை அரசியல்-மத கண்ணாடி கொண்டு பார்க்காமல் நீக்கப்பட்ட பாடங்களை மீண்டும் சேர்க்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.