கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி, பிரதமர் மோடிக்கு, பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணிய சாமி எழுதிய கடிதத்தை தினமலர் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்கள் வெளியிட்டன. அக்கடிதத்தில், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் போது, தான் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷேவிடம் தொலைபேசியில் பேசி மீனவர்களை விடுவிக்க வகை செய்வதாகவும், ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் மட்டுமே எழுதி வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக சுப்ரமணிய சாமி மற்றும் இரு நாளிதழ்கள் மீது தமிழக அரசு சார்பில் அதே ஆண்டு 2 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சுப்ரமணிய சாமி சார்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சுப்ரமணிய சாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவி ராமசாமி, ஏற்கனவே அவதூறு வழக்கை எதிர்த்து நாளிதழ்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசாணையை ரத்து செய்துள்ளதாக எடுத்துரைத்தார்.