தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 10, 2022, 5:53 PM IST

ETV Bharat / city

திருவொற்றியூர் 7ஆவது வார்டில் திமுக தோத்துச்சு; என் மூச்சு நின்னுபோச்சு - சுயேச்சை வேட்பாளரின் பலே சபதம்!

சென்னை திருவொற்றியூர் 7ஆவது வார்டில் திமுக வெற்றிபெற வேண்டும் என நினைத்து களமிறங்கியிருக்கும் சுயேச்சை வேட்பாளரின் செயல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருவொற்றியூர் 7ஆவது வார்டில்  திமுக தோத்துச்சு; என் மூச்சு நின்னுபோச்சு  - சுயேச்சை வேட்பாளரின் பலே சபதம்!
திருவொற்றியூர் 7ஆவது வார்டில் திமுக தோத்துச்சு; என் மூச்சு நின்னுபோச்சு - சுயேச்சை வேட்பாளரின் பலே சபதம்!

சென்னை திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்டப் பகுதியில் 7ஆவது வார்டு அமைந்துள்ளது. இந்த வார்டில் திருவொற்றியூர் கார்கில் நகர், ராஜாஜி நகர் உட்படப் பல பகுதிகள் அடங்கியுள்ளன.

இப்பகுதியின் திமுக வட்டச் செயலாளராக இருப்பவர், ஆதிகுருசாமி. திமுக வட்டச் செயலாளராக இருந்து அப்பகுதி மக்களுக்கு பல்வேறு அடிப்படைப் பணிகளை செய்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதில் மிகுந்த அதிருப்தியடைந்த அவர் வார்டு மக்கள் மீது கொண்ட நம்பிக்கையில் சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடைய வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டு அவருக்கு குழாய் சின்னம் ஒதுக்கப்பட்டது.

தரையில் விழுந்து வணங்கி பரப்புரை
இந்நிலையில் திருவொற்றியூர் அண்ணாமலை ரயில்வே கேட் பகுதியில், ஊர் எல்லையில் மக்கள் முன்னிலையில், தனது குடும்பத்துடன் தரையில் விழுந்து வணங்கி தனது பரப்புரையைத் தொடங்கினார். மேலும் வீடு வீடாக சென்று பரப்புரையை மேற்கொண்ட அவர், கடந்த 20 ஆண்டுகளாக திமுக வட்டச்செயலாளராக இருந்து எப்படி மக்களை அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைத்தேனோ, அதைவிட சிறப்பாக மக்களின் அடிப்படை பிரச்னைகளைத் தீர்ப்பேன் என வாக்குறுதியளித்து வாக்குகளை சேகரித்தார்.


மேலும் 33 ஆண்டுகள் திமுக உறுப்பினராக இருந்து, தற்போது திமுகவிற்கு எதிராக சுயேச்சையாகப் போட்டியிடும், ஆதி குருசாமி ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப்பேட்டியில் கூறியிருப்பதாவது,

மக்களுக்குப் பல்வேறு இக்கட்டான சூழலில் உதவி
'நான் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வருகிறேன். அப்போதெல்லாம் திமுக தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்தது. நான் பிஸ்கட் கம்பெனி வைத்து இருந்ததால், அதன் மூலம் பகுதி மக்களை நேரடியாக அணுகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதனைப் பயன்படுத்தி திமுகவிற்கு வாக்களியுங்கள், உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என பரப்புரை செய்து வந்தேன்.

இதனை அறிந்த முன்னாள் அமைச்சர் கே.பி.சாமி மூலமாக எனக்கு வட்டச்செயலாளர் பதவி கிடைத்தது. அதனை வைத்து என் பகுதி மக்களுக்கு நான் பல்வேறு நலப்பணிகளை செய்துவந்தேன். அப்போது நடைபெற்ற நகராட்சி தேர்தல் மற்றும் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான் விருப்ப மனு செய்தும் என் மனு மறுக்கப்பட்டது. எனவே, மக்களின் முதலமைச்சர் ஆன ஸ்டாலின் சென்ற இடமெல்லாம் நானும் சென்று சந்தித்து பகுதி நிலைமை குறித்து எடுத்துக்கூறி வந்தேன்.

கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட புயல் போன்ற பேரிடர் காலத்திலும் பகுதி மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய உதவிகளையும் செய்து வந்தேன். தமிழ்நாடு முதலமைச்சர் என் வார்டிற்கு வருவதை அறிந்து பெருவாரியான செலவில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் கையால் பொதுமக்களுக்கு வழங்கினேன். நான் செய்யும் நலத்திட்டங்களையும் கலைஞரின் பெயரிலேயே வழங்கி வந்தேன்.

திமுகவில் சரியான வேட்பாளர் தேர்வு நடைபெறவில்லை:
கடந்த 2017, 2019 மற்றும் 2022ஆகிய ஆண்டுகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது நான் 7ஆவது வார்டிற்காக சீட்டு கேட்டிருந்தேன். ஆனால் மாவட்டச் செயலாளர் மூலமாக எனக்கு அந்த சீட் மறுக்கப்பட்டது. மேலும், தற்போது வார்டிற்கு சம்பந்தமில்லாத, மக்களிடம் அறிமுகமில்லாதவரை வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர். மேலும் மாற்றுக்கட்சி வேட்பாளர்களை வீழ்த்துவதற்கு இந்த வார்டில் திமுகவில் சரியான ஆட்கள் யாருமில்லை. இதுகுறித்து தலைமைக்கும் நான் தெரியப்படுத்தி இருந்தேன்.

200 வார்டுகளில் வெற்றி பெற வேண்டுமென முதலமைச்சர் இரவு பகலாகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் 7ஆவது வார்டில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறக்கூடாது என்ற எண்ணத்திலேயே நான் சுயேச்சையாக களம் இறங்கியுள்ளேன்.

இந்த வார்டில் நான் இருக்கும்போது திமுக தோற்றால் என் உயிர்பிரிந்து விடும். எனவே, சுயேச்சையாக நின்று வெற்றி பெற்று, இந்த வார்டை மக்களின் முதலமைச்சர் ஸ்டாலின் வார்டாக மாற்ற, என் பகுதி மக்களின் ஆதரவோடு வெற்றியை முதலமைச்சருக்கு பரிசளிப்பேன்.

மேலும் இப்பகுதி மக்கள் என்னை ஒரு வேட்பாளர் என கருதுவதில்லை. நான் இங்கு உள்ள அனைவரின் உறவினராக தான் இருந்து வருகிறேன். அந்த உரிமையில் மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறேன்.

திருவொற்றியூர் 7ஆவது வார்டில் திமுக தோத்துச்சு; என் மூச்சு நின்னுபோச்சு - சுயேச்சை வேட்பாளரின் பலே சபதம்!
இங்கு அதிமுக வேட்பாளருக்கு எதிராக சரியான ஆள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தால், நான் திமுகவில் இருந்து அவர்களுக்கு பணியாற்றி வெற்றி பெற உழைத்துருப்பேன். ஆனால், சரியான ஆள் இல்லாத காரணத்தினால் தான், நான் தற்போது சுயேச்சையாக களமிறங்கி உள்ளேன்’ என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் மாளிகையில் 30 ஆண்டுகள்: காந்தியைக் கண்ட காமாட்சி பாட்டி தேர்தலில் போட்டி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details