அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தாக்கல்செய்த மனுவில், "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, டிடிவி தினகரன் அணியில் தான் இணைந்ததால் கட்சியிலிருந்து என்னை நீக்கினர்.
மீண்டும் 2020 ஏப்ரலில் அதிமுகவில் என்னை இணைத்துக் கொண்டனர். அதன் பிறகு தேர்தல் பணி உள்ளிட்ட கட்சிப் பணிகளில் ஈடுபட்டுவந்த நிலையில், ஜூன் 16ஆம் தேதி திடீரென கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் என்னை கட்சியிலிருந்து நீக்கினர்.
தன்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல், எந்தவொரு காரணமும் இல்லாமல் கட்சியிலிருந்து தன்னை நீக்கியதன் மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறு சட்டப்பிரிவின்படி தண்டிக்க வேண்டும்" என மனுவில் கோரியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆகஸ்ட் 24ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது.
இதையும் படிங்க: 'சிவசங்கர் பாபா ஜாமீன் கோரி மனு - சிபிசிஐடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு'