தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தீபத்திருவிழா: திருவண்ணாமலை கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

சென்னை: கரோனா வைரஸ் பரவல் காரணமாக தீபத்திருவிழாவை ஒட்டி நவம்பர் 29 முதல் டிசம்பர் 3 வரை திருவண்ணாமலை கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

By

Published : Nov 18, 2020, 1:48 PM IST

Thiruvannamalai temple
Thiruvannamalai temple

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, தேர் திருவிழாவை நடத்த தமிழ்நாடு அரசு, கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வட தமிழ்நாடு துணைத் தலைவர் வி.சக்திவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தீப திருவிழாவுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும், கோயிலுக்குள் தேர் திருவிழா நடத்தப்படும் என இந்து சமய அறநிலைய துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர், தீப திருவிழாவை தவிர்த்து மற்ற நாள்களில் 5,000 பேரை அனுமதிப்பதாக கூறும்போது, உற்சவ மூர்த்திகள் ஊர்வலமும், தேர் திருவிழாவையும் மாட வீதிகளில் நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஒரு ஆண்டுக்கு அனுமதிக்க மறுத்தால் அதுவே வழக்கமாகி விடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாடவீதிகளின் நுழைவு வழிகளை தடை செய்யலாம் எனவும் மக்கள் கூட்டத்தையும் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

கோயில் நிர்வாகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தீப திருவிழாவை ஒட்டி, 29ஆம் தேதி தவிர பிற நாட்களில், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் 800 பக்தர்கள் கரோனா வழிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவர் எனவும் கரோனா காரணமாக உற்சவ மூர்த்திகளும், தேர் திருவிழாவும் கோவில் வளாகத்துக்குள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

நவம்பர் 29ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதி வரை தெப்ப திருவிழா கோயில் வளாகத்துக்குள் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நடத்தப்படும் எனவும், இந்த திருவிழாவுக்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும், டிசம்பர் 3ஆம் தேதி சண்டிகேஸ்வரர் விழாவுடன் முடிவுக்கு வருகிறது என்றார்.

ஆகம விதிகளின்படி திருவிழாக்களை நடத்த வேண்டும் எனவும், அரசியல் காரணங்களுக்காக மக்கள் கூடுவதை அனுமதிக்கும் அரசு, மத ரீதியான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுப்பதாக ரங்கராஜன் நரசிம்மன் குறை கூறினார்.

உற்சவர் ஊர்வலத்தையும், தேர் திருவிழாவையும் மாட வீதிகளில் நடத்துவது குறித்து, மாவட்ட நிர்வாகம், காவல் துறை, கோயில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

பொதுநலனை கருதியே அரசு இந்த முடிவு எடுத்துள்ளதாகவும், அதை குறை கூற முடியாது எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், அடுத்த ஆண்டு முதல் இயல்புநிலை திரும்பி, கார்த்திகை தீப திருவிழாவும் வழக்கமாக நடக்கும் எனவும் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details