சென்னை: சென்னையை அடுத்த பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில், தமிழ்நாடு அரசு நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தது. தற்போது அப்பகுதியில் அரசு விதிமுறைகளை மீறி காஞ்சிபுரம் 2 இணை சார் பதிவாளர் அலுவலகத்தில், பிரகாஷ் சில்க் அண்ட் சாரீஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சதுர அடி கணக்கில் நிலம் மதிப்பீட்டை உயர்த்துவதற்காக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியது.
அதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும்போது அரசுக்கு இழப்பீடு ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவினர் நிலத்திற்குரிய விலையை மதிப்பீடு செய்வார்கள். மேலும், அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் பத்திரப்பதிவு செய்த இணை சார்பதிவாளர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.