தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிகளின் மரண தண்டனை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் - AIADMK Student Leader City IT Division Secretary

தாய், தந்தை, சகோதரனை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றதாக கைது செய்யப்பட்ட தம்பதிகளின் மரண தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிகளின் மரண தண்டனை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தம்பதிகளின் மரண தண்டனை ரத்து - சென்னை உயர்நீதிமன்றம்

By

Published : Sep 25, 2022, 8:14 AM IST

சென்னை:திண்டிவனம், காவேரிப்பாக்கம் சுப்பாராயன் தெருவை சேர்ந்த ராஜு - கலைச்செல்வி தம்பதிக்கு கோவர்த்தனன், கவுதமன் என இரு மகன்கள் உள்ளனர். திண்டிவனம் நகர அதிமுக மாணவரணி தலைவர் மற்றும் நகர ஐ.டி. பிரிவு செயலாளராக இருந்த கோவர்த்தன், புதிய தொழில் தொடங்க பணம் கேட்டு நச்சரித்தும், பணம் கொடுக்காததால் பெற்றோர் மற்றும் சகோதரன் மீது கோபத்தில் இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2019 மே 15 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ராஜுவின் வீட்டில் நெருப்பும் புகையும் வந்ததால் அக்கம் பக்கத்தினர் வாசல் கதவை உடைத்து திறந்து சென்று பார்த்த போது ராஜு, கலைச்செல்வி, கவுதமன் ஆகியோர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தனர்.

ஏசி பெட்டி வெடித்து பெற்றோரும், சகோதரனும் இறந்து விட்டதாக கோவர்த்தன், திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில், மூவரையும் கோவர்த்தனனும், அவரது மனைவி தீபகாயத்திரியும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்தது தெரிய வந்தது.

கோவர்த்தனன் - தீபகாயத்திரி

இதையடுத்து இருவர் மீதும் காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் காரணமாக, இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கோவர்த்தனன் மற்றும் தீபகாயத்ரியை குற்றவாளிகளாக அறிவித்து, இருவருக்கும் மரண தண்டனை விதித்து 2021 அக்டோபரில் தீர்ப்பளித்தது.

மரண தண்டனையை உறுதி செய்ய வழக்கு ஆவணங்களை சிறப்பு நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பியது. அதேபோல தண்டனையை எதிர்த்து இருவரும் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்குகள், நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை எனவும், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல சாட்சிகள் பல்டி அடித்து விட்டதாகவும், ஏசி வெடித்து தான் மூவரும் இறந்துள்ளதாகவும், திட்டமிட்ட கொலை என்பது நிரூபிக்கப்படவில்லை எனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கோவர்த்தன் மற்றும் தீபகாயத்திரிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். வேறு வழக்குகளில் சம்பந்தப்படவில்லை என்றால் இவர்கள் இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மதுரையிலும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ABOUT THE AUTHOR

...view details