சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி லாவண்யா, தஞ்சை மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்ட தொடர் போரட்டத்தின் காரணமாக, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரைக் கிளை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டது.
இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. தமிழ்நாடு அரசுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தீர்ப்பு, நீதிக்குக் கிடைத்த வெற்றி; இது பாஜகவின் தொடர் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
கட்டாய மதமாற்றம் - அப்பள்ளியைக் காப்பாற்ற ஆளும்கட்சி முனைப்பு
கட்டாய மதமாற்றம் செய்வதற்காக கொடுக்கப்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலர்களோ, தமிழ்நாடு அரசின் அமைச்சர்களோ, அல்லது முதலமைச்சரோ பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்றோ அல்லது ஆறுதல் உதவிகளையோ இதுவரை கொடுக்கவில்லை.
இன்னமும் சொல்லப்போனால், விசாரிக்கும் முன்பே காவல் துறையினர், மாநில அரசின் அமைச்சர்கள் எனப் பேசிய அனைவரும், இவ்வழக்கில் கட்டாய மதமாற்றத்திற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்ற முடிவுக்கு வந்து ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்தினர்.
இந்த வழக்கு பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் முதலமைச்சர் மௌனம் காப்பதாலும், ஆளும் கட்சியின் எண்ணம் தெளிவாகத் தெரிந்தது. கட்டாய மதமாற்றத்திற்கு ஒரு இளம்பெண்ணை பலி வாங்கிய கட்டாய மதமாற்றத்தைக் கண்டிக்காமல் அப்பள்ளியைக் காப்பாற்றுவதில் ஆளும்கட்சி முனைப்பாக இருந்தது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது.